மாதத்திற்குப் பத்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் சமையல்காரராகப் பணியாற்றும் மத்தியபிரதேசத்தைச் சேர்ந்தவரின் வங்கிக் கணக்கில் 40 கோடிக்கும் அதிகமான தொகைப் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.
2017-ம் ஆண்டு மெஹ்ரா சுங்கச்சாவடியில் வேலைச் செய்த போது, சஷி பூஷன் ராய் என்ற மேற்பார்வையாளருடன் ரவீந்திரா என்பவருக்குப் பழக்கம் ஏற்பட்டது.
2019-ம் ஆண்டு ராய், ரவீந்திராவை டெல்லிக்கு அழைத்துச் சென்று, அவரது வருங்கால வைப்பு நிதி கணக்குக்காக ஒரு வங்கிக் கணக்கைத் திறந்திருக்கிறார். அதன் பிறகு, வேலை நிமித்தமாகப் புனே சென்ற ரவீந்திரா, அந்தக் கணக்கை பற்றி முற்றிலும் மறந்துவிட்டார்.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், ரவீந்திராவின் சொந்த ஊரான பிண்டில் உள்ள அவரது வீட்டிற்கு ஆங்கிலத்தில் ஒரு நோட்டீஸ் வந்தது. குடும்பத்தினருக்கு என்னவென்று புரியாத நிலையில், ஜூலை மாதம் இரண்டாவது நோட்டீஸ் வந்த பிறகு, ரவீந்திராவுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக வீட்டுக்கு வந்த ரவீந்திரா, ஒரு வழக்கறிஞரை அணுகியபோதுதான், அவரது பெயரில் 40 கோடி ரூபாய்க்கும் மேல் பரிவர்த்தனை நடந்த அதிர்ச்சிகரமான உண்மை தெரியவந்தது.
ரவீந்திராவின் பான் மற்றும் ஆதார் அட்டைகளை பயன்படுத்தி, ஷௌரியா இன்டர்நேஷனல் டிரேடர்ஸ் என்ற நிறுவனமும் தொடங்கப்பட்டு, அதன் மூலம் 2023-ம் ஆண்டு வரை இந்த மோசடி நடந்திருக்கிறது. இது தொடர்பாக மத்தியபிரதேச உயர்நீதிமன்றத்தை ரவீந்திரா நாடியுள்ளார்.