பிரதமர் மோடியின் தாயார் பேசுவதுபோல் AI மூலம் உருவாக்கப்பட்ட வீடியோவை வெளியிட்ட பீகார்க் காங்கிரஸுக்கு பாஜகக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் பீகார் மாநிலம் தர்பாங்காவில் நடைபெற்ற வாக்காளர் யாத்திரையில் காங்கிரஸ் தொண்டர் ஒருவர், பிரதமர் மோடியின் தாயார் குறித்து அவதூறாகப் பேசினார்.
இதற்கு பாஜகக் கடும் கண்டனம் தெரிவித்து வந்தது. இந்நிலையில், பீகார் காங்கிரஸ், எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டது. AI மூலம் உருவாக்கப்பட்ட அந்த வீடியோ, பிரதமர் மோடியின் கனவில் அவரது தாயார் வந்து கேள்வி எழுப்புவதுபோல் அமைந்துள்ளது.
பிரதமர் மோடியின் தாயாரை மீண்டும் அவமதிக்கும் வகையில் காங்கிரஸ் வெளியிட்ட இந்த வீடியோவுக்குப் பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பீகார் மாநில பாஜக, திமிர்பிடித்த மற்றும் அராஜக ராகுல் காந்தியின் கட்டளைப்படி இதுபோன்ற வீடியோக்கள் பரப்பப்படுவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளது.
பிரதமர் மோடியை விமர்சிக்க எதுவும் கிடைக்காதபோது அவரது தாயாரை போலி வீடியோவில் காட்டி அவரை அவமதிக்கும் வார்த்தைகளைச் சொல்ல வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பூனவல்லா, காங்கிரஸ் கட்சி காந்திவாடிக்குப் பதிலாகக் காளிவாடியாக மாறிவிட்டதாக விமர்சித்துள்ளார்.