தகுதியற்ற பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்துவிட்டுப் புதிய வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அதிகச் சலுகைகளை வழங்குமாறு ஆட்டோ மொபைல் நிறுவனங்களுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவுறுத்தி உள்ளார்.
டெல்லியில் இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்க மாநாட்டில் பேசிய அவர், நாட்டிலுள்ள 97 லட்சம் தகுதியற்ற வாகனங்களை அகற்றுவதன் மூலம் ஜிஎஸ்டி வருவாயாக அரசுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும் என்று கூறினார்.
மேலும், புதிய வாகனங்களுக்கான தேவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், இறக்குமதி செய்யப்படும் எஃகு, அலுமினியம், பிளாட்டினம் போன்ற முக்கிய உலோகங்களின் உள்நாட்டுத் தேவையையும் குறைக்க முடியும் என்றும் அவர் எடுத்துரைத்தார்.
தற்போது, சராசரியாக மாதந்தோறும் 16 ஆயிரத்து 830 வாகனங்கள் ஸ்கிராப் செய்யப்படுவதாகவும், இந்த முயற்சிக்காகத் தனியார் துறை 2 ஆயிரத்து 700 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாகவும் கட்கரி தெரிவித்தார்.
மேலும், ஸ்கிராப்பேஜ் சான்றிதழ்களைச் சமர்ப்பித்து புதிய வாகனங்களை வாங்குபவர்களுக்கு ஜிஎஸ்டி நிவாரணம் வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.