நாமக்கல் அருகே நீர்நிலைகளுக்கு நடுவில் தமிழக அரசு அமைத்து வரும் மின் மயானத்திற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த மொளசி அருகே உள்ளது முனியப்பம்பாளைம் என்ற கிராமம். இங்கு சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி காவிரி கரையோரம் உள்ளதால் பெரும்பாலான மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த பணிகளைச் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் காவிரி கரையோரப் பகுதியில் 2 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன மின் மயானம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சுற்றிலும் நீர்நிலைகள் உள்ளதால், புதிதாக அமைக்கப்படும் மின் மயானம் அரிப்பு ஏற்பட்டு இடிந்து விழும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
நீர் நிலைகளுக்கு மத்தியில் மின் மயானத்தை அமைக்கக்கூடாது என வலியுறுத்தி பொதுமக்கள் பலமுறை மொளசி பஞ்சாயத்து அலுவலகம் மற்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இருந்தபோதும், அதிகாரிகள் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
விவசாயிகளுக்குச் சொந்தமான சுமார் 25 ஏக்கர் பட்டா நிலம் நீரில் மூழ்கி வருவதாகவும், இதற்கு இழப்பீடு வழங்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், விவசாய நிலங்களை ஆக்கிரமித்து நடைபாதை அமைத்து மின் மயானம் அமைக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஏற்கனவே நடைபாதையில் உள்ள தடுப்பு சுவர்களில் நீர் அரிப்பு ஏற்பட்டுள்ள போதிலும், அதனைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் திமுகவினர் சொந்த லாபத்திற்திற்காக இந்தத் திட்டத்தை செயல்படுத்தி வருவதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, இவ்விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.