அமெரிக்காவில் டிரம்ப்பின் ஆதரவாளரான சார்லி கிர்க்கை கொலை செய்த குற்றவாளி 33 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பிடிபட்டது எப்படி?. இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
அந்தச் சம்பவம் நடந்தது செப்டம்பர் 10ம் தேதி. அன்றைய தினம் அமெரிக்காவின் யூட்டா மாகாணத்தில் உள்ள உட்டா பல்கலைக்கழகத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.
அவர்களுக்கு மத்தியில், சார்லி கிர்க் உரையாற்றிக்கொண்டிருந்தார். அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மிக நெருங்கிய நண்பரான இவர், தீவிர வலதுசாரி ஆர்வலராக அறியப்படுகிறார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப்-க்கு ஆதரவாக இவர் மிகத் தீவிர பரப்புரை மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில், உட்டா பல்கலைக்கழகத்தில் அவர் பல்வேறு விவகாரங்கள் குறித்து உரையாற்றிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென எங்கிருந்தோ ஒரு குண்டு பாய்ந்து வந்து அவரது கழுத்தில் பாய்ந்தது. கண்ணிமைக்கும் நேரம்தான். அவர் அப்படியே சரிந்து விழுந்து உயிரிழந்தார்.
என்ன நடக்கிறது? யார் தாக்குதல் நடத்தினார்கள்? எங்கிருந்து அந்தக் குண்டு பாய்ந்து வந்தது?… யாருக்கும் தெரியவில்லை. அங்கு கூடியிருந்த மக்கள் அனைவரும் செய்வதறியாது நாலாபுறமும் அலறியடித்தபடி ஓட தொடங்கினர்.
சார்லி கிர் சுட்டுக்கொல்லப்பட்டார் என்ற தகவல் பரவியதும் ஒட்டுமொத்த பரபரப்பு பற்றிக்கொண்டது. கடந்தாண்டு இதேபோலத்தான் ட்ரம்ப்பைக் கொல்லவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது நூலிழையில் அவர் உயிர்தப்பினார். அதேபோன்ற தாக்குதல்தான் இந்தமுறை நடத்தப்பட்டு, அவரது ஆதரவாளர்க் கொல்லப்பட்டுள்ளார்.
கொலையாளியைப் பிடிக்க உடனடியாகத் தனிப்படை அமைக்கப்பட்டது. கொலைக் குறித்த வீடியோக்களை ஆய்வு செய்தபோது, மெரூன் நிற டீ-சர்ட் அணிந்த இளைஞர் ஒருவரின் நடவடிக்கைப் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அந்த இளைஞரின் பெயர் டெய்லர் ராபின்சன். அவரது வயது வெறும் 22 வயதுதான்.
அந்த வீடியோ வெளியிடப்பட்ட நிலையில், அதனை டெய்லர் ராபின்சனின் தந்தையும் பார்த்தார். உடனடியாகத் தனது மகனைத் தொடர்புகொண்ட அவர், போலீசில் சரணடையும்படி வலியுறுத்தியுள்ளார். ஆனால், டெய்லர் ராபின்சன் கேட்பதாக இல்லை. உடனே, தனக்குத் தெரிந்த பாதிரியாரின் உதவியை நாடிய அவர், தனது மகனிடம் அவரைப் பேச வைத்தார். ஒருவழியாக டெய்லர் ராபின்சன் சரணடைய சம்மதிக்கவே, அந்தப் பாதிரியார் போலீசாருக்குத் தகவல் அளித்தார்.
இதனையடுத்துக் கொலை சம்பவம் நிகழ்ந்த 33 மணிநேரத்தில் டெய்லர் ராபின்சன் கைது செய்யப்பட்டார். இதனிடையே, தனது நண்பன் ஒருவனைத் தொடர்புகொண்ட ராபின்சன், துப்பாக்கியைத் துணியில் சுற்றிப் புதரொன்றில் மறைத்து வைத்துள்ளதாகக் கூறியிருந்தார். அதனடிப்படையில் அந்தத் துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டது.
சார்லி கிர்க்கைக் கொலை செய்தபோது அவர் மெரூன் நிற டி-சர்ட், சாம்பல் நிற பேண்ட், வெள்ளை லோகோவுடன் கூடிய கருப்பு தொப்பி, சாம்பல் நிற ஷூ அணிந்திருந்தார். 33 மணிநேரம் கழித்து அவர் கைது செய்யப்பட்டபோதும் அவர் அதே உடையில்தான் இருந்தார்.
அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சார்லி கிர்க்கை அவர்க் கொலை செய்யக் காரணம் என்ன? அவருக்குப் பின்னால் வேறு யாரேனும் உள்ளார்களா? என்பது குறித்த கேள்விகளுக்கான விடை, முழுமையான விசாரணைக்குப் பிறகுதான் தெரியவரும்.