கோவையைச் சேர்ந்த பெண்ணின் மகளிர் உரிமை தொகை, கடந்த 2 ஆண்டுகளாக உத்தரப்பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு கொண்டம்பட்டியை சேர்ந்த மகேஸ்வரி என்பவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்தார்.
அவருக்கு எந்தத் தகவலும் வராததால், தனது மனு நிராகரிக்கப்பட்டதாக எண்ணிய மகேஸ்வரி, கடந்த ஜூலை 25ஆம் தேதி கிணத்துக்கடவு ஒன்றியத்தில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மீண்டும் விண்ணப்பித்துள்ளார்.
மனுவை ஆய்வு செய்த அதிகாரிகள், கடந்த 2 இரண்டு ஆண்டுகளாக மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருவதாகவும், வங்கி கணக்கை சரிபார்க்குமாறும் கூறியுள்ளனர்.
பின்னர், வங்கிக்குச் சென்று விசாரித்தபோது மகேஸ்வரியின் ஆதார் எண்ணுடன் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சாந்திதேவி என்பவரது வங்கி கணக்கு இணைக்கப்பட்டுள்ளதாகவும், மாதந்தோறும் சாந்திதேவியின் வங்கி கணக்குக்கு மகளிர் உதவித்தொகை செல்வதாகவும் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மகேஸ்வரி பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
அதில், இரண்டு ஆண்டுகளாக, வேறு ஒருவரின் வங்கி கணக்குக்குச் சென்றுள்ள மகளிர் உரிமை தொகையை மீட்டு தர வேண்டும் என்றும், தனது வங்கி கணக்குக்கு மகளிர் உரிமை தொகையை மாற்றித் தரவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.