சென்னையில் மக்களை அச்சுறுத்தும் புதிய சவாலாக ஆப்பிரிக்க நத்தைகள் ஊடுருவியுள்ளன. விவசாயம் மற்றும் மனிதர்களின் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் ஆப்பிரிக்க நத்தைகளை அழிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னையின் செயிண்ட் தாமஸ் மவுண்ட், திரிசூலம், பெருங்களத்தூர் போன்ற சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் மட்டுமே தென்பட்ட ஆப்பிரிக்க நத்தைகள் தற்போது நகரின் மையப் பகுதிகளான வேளச்சேரி, அடையார், திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளிலும் தென்படத் தொடங்கியுள்ளது. 500க்கும் அதிகமான தாவர வகைகளை உண்டு வாழக்கூடிய இந்த ஆப்பிரிக்க நத்தைகள், பல்வேறு விதமான மூலிகைத் தாவரங்களையும் அழித்து உண்ணக்கூடிய ஆபத்துமிக்கதாகத் திகழ்கிறது.
ஆப்பிரிக்க நத்தைகளின் மூலம் அபாயகரமான கிருமிகள் உடலுக்குள் புகுந்தால் மூளை அழற்சி, வாந்தி, தலைவலி, காய்ச்சல் போன்ற கடுமையான நோய்களை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். காய்கறிகள் வாயிலாகவோ, மாசுபட்ட நீரின் மூலமாகவோ ஆப்பிரிக்க நத்தைகளின் கிருமிகள் பரவும் எனவும் கூறப்படுகிறது. அரசு விரைவில் ஆப்பிரிக்க நத்தைகளின் கணக்கெடுப்பை நடத்தி அவற்றைப் பாதுகாப்பாக அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உணவுப் பண்டங்களின் மூலமாக ஆப்பிரிக்க நத்தைகள் சென்னைக்குள் நுழைந்திருப்பதாகவும், அவைகள் குறுகிய காலத்திற்குள் இனப்பெருக்கம் செய்து தற்போது லட்சக்கணக்கான அளவிற்குப் பெருகியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதைய சூழலில் ஆப்பிரிக்க நத்தைகளின் பாதிப்பு பெரிய அளவில் இல்லை என்றாலும், அடுத்தடுத்து வரும் காலங்களில் இது பெரும் சவாலாக மாறும் என உயிரியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். விவசாயம், சுற்றுச்சூழல் மற்றும் மக்களின் உடல்நலத்திற்கும் தீங்கு விளைவிக்கும் ஆப்பிரிக்க நத்தைகளை உடனடியாகக் கண்டறிந்து அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைப் பரவலாக எழுந்துள்ளது.