உலகிலேயே முதன்முறையாக, மூங்கில்களை கொண்டு எத்தனால் தயாரிக்கும் ஆலையைப் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்து, எரிசக்தி உற்பத்தியில் தன்னிறைவு அடைய வேண்டும் என்ற இலக்கை நோக்கி மத்திய அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
அதன்படி அசாமின் கோல்கா மாவட்டத்தில், நுமாலிகர் பகுதியில் மூங்கில்களை கொண்டு எத்தனால் தயாரிக்கும் ஆலையை, ஆயில் இந்தியாவின் கீழ் இயங்கும் ‘நுமாலிகர் ரிபைனரி’ நிறுவனம் அமைத்துள்ளது.
5 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் 34 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாவும் 50 ஆயிரம் பொதுமக்கள் பயன் அடைவார்கள் எனக் கணிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் மூங்கில் அதிகளவு கிடைப்பதால், இதற்குப் பெரும் உதவியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
மேலும், நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கவும் வழிவகை ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மூங்கில் எத்தனால் ஆலை செயல்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி புரட்சியின் மையமாக இந்தியா உருவெடுக்கும் என்பதில் ஐயமில்லை.