வக்பு வாரிய திருத்தச் சட்டத்திற்கு முழுமையாகத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 8-ம் தேதி அமலுக்கு வந்த வக்பு சட்ட திருத்த மசோதாவுக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அதனைச் செயல்படுத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது.
இதையடுத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வின் முன்பு நடைபெற்ற விசாரணையானது கடந்த மே மாதம் 22ம் தேதி நிறைவுற்று, வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், வழக்கில் தீர்ப்பை வாசித்த சஞ்சீவ் கண்ணா தலைமையிலான நீதிபதிகள், வக்பு வாரிய திருத்தச் சட்டத்திற்கு முழுமையாகத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர்.
தனிப்பட்ட குடிமக்கள் உரிமைப் பற்றி முடிவெடுக்க மாவட்ட ஆட்சியரை அனுமதிக்க முடியாது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், வக்பு நிலம் தொடர்பாக ஆட்சியருக்கு அதிகாரம் தரும் விதிக்கு இடைக்கால தடை விதித்தனர்.
மேலும், வக்பு சொத்துகளை அளிப்போர் 5 ஆண்டுகள் இஸ்லாம் மதத்தைப் பின்பற்ற வேண்டும் என்ற விதிக்கும் தடை விதிக்கப்பட்டது.