சேலத்தில் உரிய விலைக் கிடைக்காமல் அரளிப்பூ செடிகளில் இருந்து பூக்கள் உதிர்ந்து கிடப்பதால், விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி கிராமத்தில் சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில் ஏராளமான பூக்கள் பயிரிடப்பட்டுள்ளன.
அதில் அரளி, நந்தியாவட்டம் பூக்கள் மட்டும் 250 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளன. இந்நிலையில், திருமண சீசன் முடிவதன் காரணமாக, இந்தப் பூக்கள் ஒரு கிலோவுக்கு 10 ரூபாயிலிருந்து 30 ரூபாய் வரை மட்டுமே விலைக் கிடைக்கிறது.
அதே வேளையில் பூக்களைப் பறிக்க வரும் ஒரு தொழிலாளிக்கு நாள் ஒன்றுக்கு, 50 ரூபாய் வரைக் கூலி கொடுக்க வேண்டி இருப்பதால் நஷ்டத்தைத் தவிர்க்க பூக்கள் பறிக்கும் பணியை விவசாயிகள் கைவிட்டுள்ளனர்.
தங்கள் உழைப்பின் பலனாக வளர்ந்த பூக்களுக்குச் சந்தையில் விலை இல்லாமல் போய்விட்டதாக விவசாயிகள் வேதனைத் தெரிவித்துள்ளனர். மேலும், தங்கள் பகுதியில் சென்ட் தொழிற்சாலை அமைத்துத் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஒருதரப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
செடிகளில் பூத்துக் குலுங்கிய அரளிப் பூக்கள் பறிக்கப்படாமல் மண்ணோடு மண்ணாகி கிடப்பது, உழைப்பும், முதலீடும் வீணான விவசாயிகளின் ரத்தத்தைக் கொந்தளிக்க செய்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
தமிழக அரசு இந்த விவகாரத்தில் தனிக் கவனம் செலுத்தி, பனமரத்துப்பட்டியில் மலர்ச் சந்தை அமைத்துக் கொடுத்து தங்கள் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும் என மற்றொரு தரப்பினர் இன்னொரு கோரிக்கையையும் முன்வைத்துள்ளனர்.
விலைக் கிடைக்காமல் வீணாகும் அரளிப் பூக்களால், சேலம் மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், இவர்களின் கோரிக்கைகளுக்குத் தமிழக அரசு செவி சாய்க்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.