ஆப்ரேஷன் சிந்தூரால் பெரும் இழப்பு ஏற்பட்டதை ஜெய்ஷ்-இ- முகமது பயங்கரவாத இயக்கமே ஒப்புக் கொண்டுள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மத்தியப்பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் பெண்களுக்கான வளர்ச்சி திட்டங்களைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். முன்னதாக விழா நடைபெறும் இடத்திற்கு வாகனப் பேரணியாக வந்த பிரதமருக்கு, கூடியிருந்த மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மக்களைக் கண்டு கையசைத்தபடி பிரதமர் மோடி, பிரசார வாகனத்தில் பயணித்தார்.
இதையடுத்து விழா மேடைக்கு வந்த அவர், ‘ஸ்வஸ்த் நாரி சஷக்த் பரிவார் அபியான்’ என்ற பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமையும், ‘8வது ராஷ்ட்ரிய போஷன் மா’ பிரசாரத்தையும் தொடங்கி வைத்தார்.
பின்னர் விழா மேடையில் உரையாற்றிய அவர், அணு ஆயுத அச்சுறுத்தலுக்குப் புதிய இந்தியா ஒருபோதும் அஞ்சாது எனத் தெரிவித்தார்.
கண் இமைப்பதற்கு முன்பாக நமது பாதுகாப்பு படைகள் பாகிஸ்தான் தீவிரவாதிகளை அடிபணிய வைத்ததாகப் பெருமிதம் தெரிவித்த பிரதமர் மோடி, ஆப்ரேஷன் சிந்தூரால் பெரும் இழப்பு ஏற்பட்டதை ஜெய்ஷ்-இ- முகமது பயங்கரவாத இயக்கமே ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.