கத்தாரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பின் அங்கு கூடிய 40-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய நாடுகள், ‘அரபு – இஸ்லாமிய நேட்டோ’ உருவாக்கம் குறித்த யோசனையை முன்வைத்தன. இந்த முயற்சி இந்தியாவிற்குப் புதிய சவால்களை ஏற்படுத்தியுள்ளன. அதுபற்றி விரிவாக விவரிக்கிறது இந்தச் செய்தி தொகுப்பு…
கத்தாரில் கடந்த செப்டம்பர் 9-ம் தேதி ஹமாஸ் தலைவர்கள் தங்கியிருந்த குடியிருப்பு மீத இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதனைப் பாதுகாப்பு நடவடிக்கை எனக் குறிப்பிட்ட இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, தீவிரவாதிகளுக்குத் தங்குமிடம் அளிப்பவர்கள் மீது சம்பந்தப்பட்ட நாடுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் அதனை இஸ்ரேல் மேற்கொள்ளும் என எச்சரித்தார்.
இந்த நிகழ்வுக்குப் பின் கத்தார் தலைநகர் டோஹாவில் பெரிய அளவில் மாநாடு ஒன்றை நடத்திய 40-க்கும் மேற்பட்ட அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள், இஸ்ரேலின் நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
குறிப்பாகக் கத்தார் எமீர் தமிம் பின் ஹமத் அல்தானி, காசாவை வாழ முடியாத நிலைக்கு இஸ்ரேல் தள்ளுவதாகக் குற்றம் சாட்டினார். துருக்கி அதிபர் எர்டோகானும் இஸ்ரேலை பொருளாதார ரீதியில் ஒடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதே வேளையில், இஸ்ரேலை எதிர்கொள்ள ஒருங்கிணைந்த ராணுவ நடவடிக்கை தேவை என எகிப்து, ஈரான், ஈராக் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் எடுத்துரைத்தன.
இந்த மாநாட்டில் முக்கிய பங்கு வகித்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஈஷாக் தார் ஆகியோர், இஸ்ரேலின் திட்டங்களைத் தடுக்க ஒருங்கிணைந்த படை அவசியம் எனத் தெரிவித்தனர். அதனடிப்படையில் ‘அரபு – இஸ்லாமிய நேட்டோ’ என்ற புதிய ராணுவ கூட்டமைப்பை உருவாக்கும் யோசனையை, மாநாட்டில் பங்கேற்ற அனைத்து நாடுகளும் ஒருமனதாக ஆதரித்தன.
இந்நிலையில், பாகிஸ்தானின் பங்களிப்பு மற்றும் துருக்கியின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முயற்சி இந்தியாவின் பாதுகாப்பிற்குப் புதிய சவால்களை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. இந்தச் சூழ்நிலையை பயன்படுத்தி பாகிஸ்தான் காஷ்மீர் பிரச்னையை மீண்டும் உலக அரங்கில் எழுப்ப வாய்ப்புள்ளதால், இது இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பு விவகாரத்தில் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாகக் கூட்டமைப்பில் உள்ள ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் மற்ற அனைத்து நாடுகளும் இணைந்து நேட்டோ பாணியில் எதிர்த்தாக்குதல் நடத்தும் என்பதால், இந்தக் கூட்டமைப்பு உருவாவது இந்தியாவிற்கு அசாதாரண சூழலை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது.
மற்றொருபுறம், இந்தியா-இஸ்ரேல் இடையேயான உறவு தற்போது வலுப்பெற்றுள்ள நிலையில், புதிதாக உருவாகவுள்ள ராணுவ கூட்டமைப்பின் பார்வையில் இந்தியா, இஸ்ரேல் பக்கம் நிற்பதாகத் தோன்றும் அபாயமும் உள்ளது. இந்தச் சூழலில், ‘அரபு – இஸ்லாமிய நேட்டோ’ என்ற ராணுவ கூட்டமைப்பு உருவாக்கம் தற்போது வெறும் பேச்சுவார்த்தை மட்டத்தில் இருந்தாலும், அதன் எதிர்கால முன்னேற்றங்களைக் கூர்ந்து கண்காணிக்க வேண்டிய சூழலுக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.
















