உலகின் மிகப்பெரிய கடற்படை போர்சக்தியாக இந்தியா மாறியுள்ளது. குறிப்பாக ஒட்டுமொத்த இந்தியப் பெருங்கடல் முழுமைக்கும் பாதுகாப்பு அரணாக நிற்கும் இந்தியா ஒரு அணுசக்தி கோட்டையாக நிமிர்ந்து நிற்கிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இந்தியப் பெருங்கடல்- ஒரு பரபரப்பான வர்த்தகப் பாதையாக இல்லாமல்,வேகமாக வளர்ந்து வரும் அணுசக்தி போட்டியின் அரங்கமாகவும் மாறியுள்ளது. இந்தப் பகுதியில், சீனா மற்றும் பாகிஸ்தானின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களின் அச்சுறுத்தல்களை சமாளிக்கவும், தேசிய பாதுகாப்பு நலன்களைப் பாதுகாக்கவும், இந்தியக் கடற்படை மேலாதிக்கம் செலுத்தி வருகிறது.
அதாவது, இந்தியப் பெருங்கடலில் எல்லா நேரங்களிலும் குறைந்தது ஒரு அணுசக்தி ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருக்க வேண்டும். நாட்டின் மீது அணுசக்தித் தாக்குதல் ஏற்பட்டால் தயங்காமல், உடனடியாக, துல்லியமான எதிர் தாக்குதலை நடத்தவேண்டும். எந்தவிதமான அணுஆயுதத் தாக்குதலையும் சமாளிப்பதும் கடல் பாதுகாப்பை உறுதி செய்வதே இந்தத் தொடர் கடல் தடுப்பு குறிக்கோள்.
INS சக்ரா போர்க் கப்பல் 1987 முதல் 1991 வரை சேவை செய்தது. அதன்பிறகு, ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்ட INS சக்ரா-II 2012-ல் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. தொடர்ந்து, அகுலா ரக நீர்மூழ்கிக் கப்பல் INS சக்ரா-III இந்த ஆண்டு இறுதிக்குள் இந்திய கடற்படையில் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advanced Technology Vessel (ATV) என்னும் மேம்பட்ட தொழில்நுட்பக் கப்பல் திட்டத்தின் கீழ், அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் திட்டம் தொடங்கியுள்ளது. அணுசக்தியால் இயங்கும் பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் அணுசக்தியால் இயங்கும் தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்கள் உட்பட 12 அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை இந்தியா உருவாக்கி வருகிறது.
அரிஹந்த் கிளாஸ் SSBNகள் இந்தியாவின் முதல் உள்நாட்டு அணுசக்தி பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆகும். 2016-ல் INS அரிஹந்த்தும், 2024-ல் INS அரிஹாட்டும் இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டன. INS அரிகாட் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட அணுசக்தியால் இயங்கும் இரண்டாவது பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல் ஆகும். கூடுதலாக, இந்தியாவின் மூன்றாவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் அரிதாமன் இந்திய கடற்படையில் சேர்க்கப் பட்டுள்ளன.
மேலும், S-4 எனப்படும் மூன்றாவது அரிஹந்த்-வகுப்பு அணுசக்தி பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல் கட்டும் பணி 2023-ல் தொடங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், 13,500 டன் எடையுள்ள S-5 அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் தயாரிக்கும் பணிகள் வேகப் படுத்தப்பட்டுள்ளன.
K-15 ஏவுகணை1500 கிலோமீட்டர் வரம்பு கொண்டதாகும். 7 டன்கள் எடை கொண்ட இந்த ஏவுகணை 1 டன் சுமந்து செல்லும் திறன் கொண்டதாகும். k-4 ஏவுகணையின் வரம்பு 3500 கிலோமீட்டர் ஆகும் இதுவும் 1 டன் எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டதாகும். k -5 ஏவுகணை, 5000 கிலோமீட்டர் மேம்படுத்தப்பட்ட வரம்பு கொண்டதாகும்.மேலும் 1 டன் சுமை திறன் கொண்டதாகும்.
இந்தியாவின் மேம்பட்ட கடற்படை அமைப்புகள் மற்றும் ஆய்வகத்தால் k -6 ஏவுகணை உருவாக்கப்பட்டு வருகிறது. சுமார் 3 டன் சுமக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணை, அதிகபட்சமாக 6000 கிலோமீட்டர் தூரம் வரை செல்லக் கூடியதாகும்.
இதற்கிடையே, கடந்த ஜனவரி மாதம், ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் வாக்ஷீர் ஆகிய மூன்று நவீனக் கடற்படை போர்க் கப்பல்கள் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டன. பேரழிவைத் தரும் கப்பல், போர்க்கப்பல், நீர்மூழ்கிக் கப்பல் ஆகியவற்றை ஒன்றாக ஒரே நேரத்தில் கடற்படையில் சேர்ப்பது இதுவே முதல் முறையாகும்.
ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களுக்கான, ஐஎன்எஸ் வர்ஷா என்ற பெயரில் புதிய கடற்படைத் தளம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தச் சிறப்பு தளத்தில் ஒரே நேரத்தில் 12 அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை நிறுத்தி வைக்க முடியும். மற்ற போர்க்கப்பல்களை நிறுத்தி வைக்கவும் இந்தத் தளத்தில் மேம்பட்ட வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களுக்காகப் பாபா அணு சக்தி ஆராய்ச்சி கழகத்தின் சிறப்பு மையமும் இத்தளத்தில் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்தக் கடற்படைத் தளத்தில் இருந்து வங்கக் கடல் மட்டுமன்றி இந்திய-பசிபிக் மண்டலம் முழுவதையும் கண்காணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய 4 நாடுகளின் கூட்டமைப்பான குவாட் அமைப்புடன் இணைந்து ஐஎன்எஸ் வர்ஷா கடற்படைத் தளம் செயல்படும் என்று கூறப்படுகிறது. இந்தக் கடற்படை தளம் அடுத்த ஆண்டில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே ஒரே நேரத்தில் 50 போர்க்கப்பல்களை நிறுத்தி வைக்கக் கூடிய விசாகப்பட்டினம் கடற்படைத் தளத்தில் வரும் 2037-ம் ஆண்டுக்குள் புதிதாக 25 போர்க்கப்பல்கள் இணைக்கப்பட உள்ளன. இந்திய கடற்படையின் அணுசக்தி முன்னேற்றங்களால், இந்தியப் பெருங்கடலை தனது அணுசக்தி கோட்டையாக இந்தியா மாற்றியுள்ளது.
















