மதுரை மாவட்டம், செல்லூரில் கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக, தெருக்களில் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்கள் பெரும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதுபற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்…
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 23 மற்றும் 24-வது வார்டுகளில் அமைந்துள்ள எம்ஜிஆர் தெரு, தியாகி பாலு தெரு, இந்திரா நகர், போஸ் வீதி மெயின் ரோடு, ஜீவானந்தம் தெரு, மணவாளநகர் போன்ற பகுதிகளில், பல மாதங்களாகக் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர்த் தேங்கி கிடக்கிறது.
இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கழிவுநீர் தேங்கி கிடப்பதால் உணவு உட்கொள்ளவோ, இரவில் தூங்கவோ கூட முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி உள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
குறிப்பாகக் குழந்தைகளின் உடல்நிலை அடிக்கடி பாதிப்பிற்குள்ளாவதாகவும், 2 நாட்கள் பள்ளிக்குச் சென்றால் அடுத்த 3 நாட்கள் விடுப்பு எடுக்கும் சூழல் உள்ளதாகவும் பெற்றோர்க் கவலை தெரிவித்துள்ளனர்.
கழிவுநீர் தேங்கி கிடப்பதால் அப்பகுதியில் கொசுக்கள் அதிகரித்து, தொற்றுநோய்கள் பரவும் அபாயம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகக் கூறும் அப்பகுதி மக்கள், ஏராளமான குடும்பங்கள் தங்கள் சோந்த வீடுகளை விட்டு வேறு பகுதிகளுக்குக் குடிபெயர்ந்து சென்றுவிட்டதாகக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினர். ஆறாக ஓடும் கழிவுநீரைக் கண்டு தங்கள் வீடுகளுக்கு வர உறவினர்கள் அஞ்சுவதாகவும் அவர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.
பலமுறை புகார் அளித்தும் மாநகராட்சி ஊழியர்கள் தங்கள் பகுதியை தற்காலிகமாக சுத்தம் செய்கின்றனரே தவிர, தங்களுக்கு ஒரு நிரந்தரத் தீர்வு கொடுக்க அவர்கள் முன்வரவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
25 ஆண்டுகளுக்கு முன் பதிக்கப்பட்ட சிறிய பைப்புகள் தற்போதைய மக்கள் தொகை அதிகரிப்பால் போதவில்லை எனக் கூறும் செல்லூர் பகுதி மக்கள், கடந்த 5 ஆண்டுகளாக இதே நிலை நீடித்து வருவதாகப் புகார் தெரிவித்துள்ளனர்.
ஆட்சியர் அலுவலகம் வர சென்று மனு அளித்தும் தங்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் ஒரு நிரந்தரத் தீர்வு கொடுக்கவில்லை எனக் கதறும் அப்பகுதி மக்கள், தங்களது துயரத்தை ஒரு நாளில் சொல்லி மாளாது என விரக்தி நிறைந்த முகத்துடன் வேதனையை வெளிப்படுத்தினர்.
இந்தக் கழிவுநீர் கால்வாய் அடைப்பு பிரச்னைக்கு மாநகராட்சி நிர்வாகம் நிரந்தரத் தீர்வு வழங்க வேண்டும் என செல்லூர் பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். உரிய நடவடிக்கை எடுக்க நிர்வாகம் தவறும் பட்சத்தில் தங்கள் பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் அதிகரித்துப் பேரழிவுக்கு வழிவகுக்கும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.