சேலம் ராஜாஜி காதி பவனில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு கொலு பொம்மைகள் விற்பனைக் களைகட்டியுள்ளது. இது குறித்து விவரிக்கிறது இந்தச் செய்தித் தொகுப்பு…
இந்துக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளுள் ஒன்று நவராத்திரி விழா. மக்களை துன்புறுத்தி வந்த மகிசாசுரனுடன் 9 நாட்கள் கடும் போர் புரிந்த ஆதிபராசக்தி, அந்த அசுரனை 10-வது நாளில் வதம் செய்தார். மக்களைப் பெருங்களிப்பில் ஆழ்த்திய இந்த வெற்றியையே மக்கள் ஆண்டுதோறும் நவராத்திரி விழாவாகக் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நவராத்திரி விழாவையொட்டி மக்கள் தங்கள் வீடுகளிலும், கோவில்களிலும் கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு நடத்துவது வாடிக்கை. அந்த வகையில் இந்த ஆண்டு நவராத்திரி விழா நாடு முழுவதும் செப்டம்பர் 22 ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 1-ம் தேதி வரை கோலாகலமாக நடைபெற உள்ளது.
இந்நிலையில், நவராத்திரி விழாவையொட்டி சேலம் மாவட்டத்திலுள்ள ராஜாஜி காதி பவனில் கொலுபொம்மை விற்பனை களைகட்டியுள்ளது. இதனால் பல வகையான கொலு பொம்மைகளை வாங்கிச் செல்ல அங்கு மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இங்கு விற்கப்படும் பொம்மைகள் அனைத்தும் கைவினைக் கலைஞர்களின் உழைப்பால் உருவாக்கப்பட்டவை என்பது தனிச் சிறப்பு. அதன் காரணமாகவே பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் இங்கு கூட்டம் கூட்டமாக வந்து கொலு பொம்மைகளை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.
குறிப்பாக ஏராளமான தாய்மார்கள் அமெரிக்கா, லண்டன், ஜெர்மனி உள்ளிட்ட பல வெளிநாடுகளில் வசிக்கும் தங்கள் பிள்ளைகளுக்குக் கொலு பொம்மைகளை இங்கிருந்து வாங்கி அனுப்பி வருகின்றனர்.
வெளிநாடு மட்டுமின்றிப் பெங்களூர், ஓசூர், ஹைதராபாத், சென்னை போன்ற நகரங்களுக்கும், இங்கிருந்து அதிக அளவில் பொம்மைகள் அனுப்பப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக இந்த ஆண்டு துவக்கத்திலேயே ராஜாஜி காதி பவனில் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில், வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டிய ஆர்டர்கள் அதிகரித்துள்ளதால் அதீத மகிழ்ச்சியில் இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
நவராத்திரி கொண்டாட்டத்தில் மக்கள் மனதில் மகிழ்ச்சியை பரப்பும் சேலம் ராஜாஜி காதி பவனின் கொலு பொம்மைகள், கைவினை கலைஞர்களின் திறமையையும், வாழ்வாதாரத்தையும் உலகளவில் காட்சிப்படுத்தியிருக்கின்றன என்றால் மிகையில்லை.