கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், செயற்கை நுண்ணறிவின் புதிய முயற்சிகள் மூலம் யானைகளை கட்டுப்படுத்த முடியும் என விலங்கு நல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது குறித்து இந்தச் செய்தி தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்…
கோவை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. மலைப்பகுதிகளில் இருந்து ஊருக்குள் இறங்கும் காட்டு யானைகள் விவசாயத் தோட்டங்களையும், குடியிருப்பு பகுதிகளையும் சூறையாடுவதால், அப்பகுதி மக்களும், விவசாயிகளும் வேதனை அடைந்துள்ளனர்.
இந்நிலையில், காட்டு யானைகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த ஆனைமலைப் புலிகள் காப்பகத்தில் இருந்து முத்து மற்றும் சுயம்பு ஆகிய இரு கும்கி யானைகள் அப்பகுதியில் களமிறக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே வனப்பகுதியை ஒட்டியுள்ள ஊர்களான தடாகம், தொண்டாமுத்தூர்ப் போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக, காட்டு யானைகள் அதிகளவில் உலா வருவதால் அங்கு வசிக்கும் மக்கள் மிகுந்த அச்சத்தில் உறைந்துள்ளனர்.
இதனால் தங்கள் விவசாயத் தோட்டங்களை பாதுகாக்க விவசாயிகள் தூக்கத்தைத் தொலைத்து காவலுக்கு இருக்கும் சூழல் உருவாகியுள்ளது. அத்துடன் விவசாயிகள், பொதுமக்கள் எனப் பலரும் காட்டு யானைகளின் தாக்குதலுக்கு ஆளாகும் சம்பவங்களும் தொடர்கதையாகி வருகின்றன.
இந்நிலையில், காட்டு யானைகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வனத்துறைக்கு, தமிழக அரசு நவீன உபகரணங்களை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல, சேதமடைந்த பயிர்களைக் கணக்கிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதற்கிடையே நீதிமன்ற உத்தரவின்படி விவசாய நிலங்களைச் சுற்றி வேலிகள் அமைப்பது யானைகளைத் தடுக்க நிரந்தரத் தீர்வாகாது என விலங்கு நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். யானைகளின் வலசைப் பாதைகள் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்படுவதால், அவை விவசாய நிலங்களுக்குள் புகுந்து செல்வது தவிர்க்க முடியாததாக மாறிவிட்டதாகவும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அத்துடன் யானைகள் நடமாட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவரத் தமிழக அரசு செயற்கை நுண்ணறிவு போன்ற தற்கால நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
காட்டு யானைகளைப் போதிய உணவின்றித் தவிப்பதே அவைக் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைய பிரதான காரணமாகப் பார்க்கப்படுகிறது. கடந்த ஆட்சி காலங்களில் யானைகள் விரும்பும் உணவுகளை வனப்பகுதியில் வளர்க்க வனத்துறைச் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதுபோன்ற நடைமுறைகள் தற்போது கிடப்பில் போடப்பட்டிருப்பது யானைகள் நடமாட்டம் அதிகரிக்க காரணமாகப் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வன வளங்களைப் பாதுகாப்பதன் மூலம் யானைகள் மற்றும் மனிதர்களிடையே சமநிலையை ஏற்படுத்தலாம் என்பதே நிதர்சனமான உண்மை.