பாகிஸ்தான் மற்றும் சவூதி அரேபியாவுக்கு இடையே முக்கியமான பரஸ்பரப் பாதுகாப்பு ஒப்பந்தம் (Strategic Mutual Defence Agreement) ஏற்பட்டுள்ளது. இதன் படி, இருநாடுகளில் எந்த நாட்டின் மீது தாக்குதல் நடந்தாலும் அது இருநாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
மத்திய கிழக்கில் மொத்தம் 16 நாடுகள் உள்ளன. இதில், 15 நாடுகள் இஸ்லாமிய அரபு நாடுகளாகும். இந்த இஸ்லாமிய நாடுகளுக்கு மத்தியில், உலகின் ஒரே யூத நாடாகத் தன்னந்தனியாக இஸ்ரேல் உள்ளது.
நீண்ட காலமாகவே, இஸ்ரேலுக்கும் அதனைச் சுற்றி இருக்கும் இஸ்லாமிய நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து பிரச்சனைகள் இருந்து வருகிறது. கடந்த வாரம், கத்தாரில் உள்ள ஹமாஸ் தலைவர்கள் தங்கியிருந்த கட்டடம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் ஹமாஸ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, கத்தார் தலைநகர் தோகாவில் அரபு – இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் அவரசமாகக் கூடி விவாதித்தனர். மொத்தம் 40 இஸ்லாமிய நாடுக்ளின் நாடுகளின் தலைவர்கள் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் பங்கேற்றனர்.
இஸ்லாமிய நாடுகளைப் பாதுகாக்க நேட்டோ போல அரபு இராணுவ கூட்டமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை எகிப்துஅதிபர் உட்பட மாநாட்டில் கலந்து கொண்ட அனைத்துத் தலைவர்களும் முன்மொழிந்தனர்.
அரபு ராணுவ கூட்டணியின் முதல் தலைவராக எகிப்து அதிபர் இருப்பார் என்றும், அதன் பிறகு,தலைமைப் பொறுப்பு சுழற்சி முறையில் 22 அரபு லீக் நாடுகளிடம் ஒப்படைக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இஸ்ரேலின் செயல்பாட்டைத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இஸ்லாமிய நாடுகளில் பெரிய ராணுவ பலம் கொண்ட நாடாக எகிப்து உள்ளது. அதேபோல் அணுஆயுதம் கொண்ட ஒரே இஸ்லாமிய நாடாகப் பாகிஸ்தான் உள்ளது. எனவே அரபு இராணுவ கூட்டமைப்பில் இந்த இருநாடுகளும் முக்கிய பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே பாகிஸ்தானின் முன்னாள் ராணுவத் தலைவர் ரஹீல் ஷெரீப் தலைமையில் இஸ்லாமிய இராணுவ கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டும் அது விரைவிலேயே நடைமுறைக்கு வராமலே காணாமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், சவூதி அரேபியா தலைமையில் பயங்கரவாத எதிர்ப்பு ராணுவ கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது.
இதற்கிடையே, சவூதி அரேபியா சென்ற பாகிஸ்தான் பிரதமர், அந்நாட்டின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானைச் சந்தித்து பேசியுள்ளார். இருநாடுகளுக்கும் இடையே பரஸ்பர இராணுவ பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
அதாவது பாகிஸ்தான் மீதான எந்தவொரு தாக்குதலும் சவூதி அரேபியா மீதான தாக்குதலாக எடுத்துக் கொள்ளப்படும். அதேபோல் சவூதி அரேபியா மீதான எந்தவொரு தாக்குதலும் பாகிஸ்தான் மீதான தாக்குதலாக எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, சவூதி அரேபியா மீதான தாக்குதலுக்குப் பதிலடியாகத் தேவைப்பட்டால் பாகிஸ்தான் தனது அணுஆயுதத்தைக் கூட பயன்படுத்தும் என்றும் இந்த ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் தாக்கங்கள் குறித்து இந்தியா ஆய்வு செய்து வருவதாகக் கூறியுள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், தேசிய நலன்களைப் பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இனி பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் பாகிஸ்தானைத் தாக்கினால், அரபு – இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைந்து தாக்குதல் நடத்தலாம் என்று கூறப்படுகிறது. அரபு இராணுவ கூட்டணியில் பாகிஸ்தானும் இடம்பெற்றால் இஸ்ரேலுக்கு மட்டுமின்றி இந்தியாவுக்கும் சிக்கல் ஏற்படும் என்று பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.