வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்குள் ஊடுருவியர்களைப் பாதுகாக்கும் நோக்கிலேயே வாக்கு திருட்டு எனும் கதையை ராகுல் காந்தி பரப்புவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றஞ்சாட்டி உள்ளார்.
பீகார் மாநிலம் பெகுசராயில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ஒவ்வொரு முறையும் காங்கிரஸ் பொய் கதைகளை கட்டவிழ்த்து விடுவதாக குற்றஞ்சாட்டினார்.
ராகுல் காந்தி சிறந்த கல்விக்காகவோ, வேலை வாய்ப்புக்காகவோ, சாலை மற்றும் மின்சாரத்திற்காகவோ யாத்திரை மேற்கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார். வங்கதேசத்தில் இருந்து வந்த ஊடுருவல்காரர்களை பாதுகாப்பதற்காகவே ராகுல் காந்தி யாத்திரை மேற்கொண்டதாகவும் அவர் விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ஊடுருவல்காரர்களுக்கு ஓட்டுரிமையும், இலவச ரேசனும் அளிக்க வேண்டுமா? என கேள்வி எழுப்பினார். மேலும் வேலைவாய்ப்புகளை, நமது இளைஞர்களுக்கு வழங்காமல், வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு வழங்குவதே காங்கிரஸின் நோக்கம் என்றும் அமித்ஷா குற்றஞ்சாட்டினார்.