உத்தராகண்ட் மாநிலம் சமோலியில் மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 10-க்கும் மேற்பட்டோர் மாயமான நிலையில் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள நந்தா நகரில் புதன் கிழமை இரவில் மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் 6 கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின.
அந்த கட்டடங்களில் இருந்த 10-க்கும் மேற்பட்டோர் மாயமாகினர். மேகவெடிப்பின் விளைவாக ஏராளமான மக்கள் இன்னும் தங்கள் வீடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கனமழையால் வெள்ளம் கரைபுரண்டோடும் வீடியோ வைரலாகி வருகிறது.
சில நாட்களுக்கு முன்புதான் அம்மாநிலத்தின் தலைநகரான டேராடூனில் மேகவெடிப்பு ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 15-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தின் நினைவு நீங்குவதற்கு முன்பாகவே தற்போது மீண்டும் மேகவெடிப்பில் பலர் மாயமானது உத்தராகண்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.