ஒசூரில் அரை மணி நேரத்திற்கு மேல் பெய்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வந்தது. இதற்கிடையே நேற்று மாலை முதலே அப்பகுதியில் மழை பெய்யத் தொடங்கியது.
சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் பெய்த மழையால், அங்கு குளிர்ச்சியான சூழல் நிலவியது. இந்நிலையில், தொடர் மழை காரணமாக நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி வருவதால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஈரோட்டில் பெய்த கனமழையால் ரயில் நிலைய பிரதான சாலையில் மழைநீருடன், கழிவுநீரும் கலந்து பெருக்கெடுத்து ஓடியதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
ஈரோட்டில் பல்வேறு பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. இதனால் பல்வேறு தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக ரயில் நிலைய பிரதான சாலையில் மழைநீருடன், கழிவுநீரும் கலந்து பெருக்கெடுத்து ஓடியதால் அவ்வழியாக நடந்து சென்ற பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகினர்.
ஒவ்வொரு ஆண்டும் இதே நிலை தொடர்வதாகவும், மக்கள் பிரச்னை குறித்து மாநகராட்சி அதிகாரிகள் துளியும் கண்டுகொள்வதில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், இந்த பிரச்னைக்கு அதிகாரிகள் விரைந்து தீர்வு காண வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.