ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள வைகை ஆற்றங்கரையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் விண்ணப்பங்கள் வீசப்பட்டிருந்த சம்பவம், மக்கள் மத்தியில் திமுக அரசு மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தாலுக்காவைச் சேர்ந்த விவசாயியான பரமானந்தம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், தெலிச்சாத்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த தான் வைகை ஆற்றங்கரைக்கு இயற்கை உபாதை கழிக்க சென்றபோது, அங்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் விண்ணப்பங்கள் வீசப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்தார்.
அதனை தான் கையோடு ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க எடுத்து வந்ததாகக் கூறி விண்ணப்பங்களை ஆதாரமாக காண்பித்தார்.
ஏற்கனவே சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வைகை ஆற்றங்கரையில் இதேபோன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் விண்ணப்பங்கள் வீசப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அதேபோன்று மற்றொரு சம்பவம் மீண்டும் அரங்கேறியிருப்பது, மக்கள் பிரச்னைகள் மீதான அரசின் அலட்சியப்போக்கை காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.