தூய்மை பணியாளர்கள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் காவல் துறையினரால் தாக்கப்பட்டதாகப் புகார் எழுந்த நிலையில், அதை விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஒரு நபர் ஆணையம் விசாரணையை தொடர சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த வழக்கறிஞர்கள் காவல்துறையால் சட்ட விரோதமாகக் கைது செய்யப்பட்டு தாக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது.
கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்களை விடுவிக்கக்கோரி ஆட்கொணர்வு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ் ரமேஷ் தலைமையிலான அமர்வு, இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க ஒரு நபர் ஆணையமாக ஓய்வுபெற்ற நீதிபதி வி.பார்த்திபனை நியமித்து உத்தரவிட்டது.
தொடர்ந்து இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி காவல்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ஜெ.நிஷாபானு தலைமையிலான அமர்வு ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்த வழங்கிய உத்தரவை நிறுத்தி வைத்தது.
இந்நிலையில், ஆட்கொணர்வு மனு தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஒரு நபர் ஆணையம் குறித்த எந்தவொரு கோரிக்கையும் வைக்கப்படாத நிலையில் அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகக் காவல்துறை தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய தலைமை நீதிபதி, இந்த விவகாரத்தில் இருதரப்பிடமும் விசாரணை நடத்தும் வகையிலேயே ஒரு நபர் ஆணையம் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்துவதை எண்ணி அரசு தரப்பு ஏன் அச்சப்பட வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார்.
அப்போது காவல்துறை தரப்பில், நீதிமன்றம் ஒரு நபர் ஆணைய உத்தரவை உறுதி செய்வதாக இருந்தால் வேறு ஒருவரை விசாரணை அதிகாரியாக நியமிக்க வேண்டும் எனக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி அமர்வு, ஒரு நபர் ஆணையம் தொடர்ந்து விசாரணை தொடர அனுமதி அளித்து, வழக்கு விசாரணையை அக்டோபர் 10-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.