மூன்று ரஷ்யச் சூப்பர்சோனிக் போர் விமானங்கள் எஸ்டோனியா வான்வெளியில் அத்துமீறி நுழைந்ததாக அந்நாடு குற்றஞ்சாட்டியுள்ளது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கை, பெரிய பிரச்னையாக மாறும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
உலகின் மிகச் சிறிய நாடுகளில் ஒன்றான எஸ்டோனியா 1918ம் ஆண்டு முதல் 1940 ஆம் ஆண்டு வரை சுதந்திர நாடாக இருந்தது. இரண்டாம் உலகப் போரில் எஸ்டோனியாவை ஹிட்லர் தலைமையிலான ஜெர்மனி படைகள் கைப்பற்றினாலும், ஸ்டாலின் தலைமையிலான ரஷ்யா எஸ்டோனியாவைத் தங்கள் வசம் கொண்டு வந்தது.
அதன் பிறகு 1991 ஆம் ஆண்டு வரை சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாகவே எஸ்டோனியா இருந்து வந்தது. சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்ததுடன் லிதுவேனியா, லாட்வியா மற்றும் எஸ்டோனியா ஆகிய நாடுகள் மீண்டும் சுதந்திர நாடாக மாறின.
எந்த நேரமும் ரஷ்யாவிடமிருந்து அச்சுறுத்தல் வரலாம் என்ற நிலையில், 2004 ஆம் ஆண்டில், எஸ்டோனியா நேட்டோ அமைப்பில் இணைந்தது. தொடர்ந்து, எஸ்டோனியா, லாட்வியா மற்றும் லிதுவேனியாவில் நேட்டோ படைகள் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன. எஸ்டோனியாவும் நேட்டோ படைகளுடன் இணைந்து கூட்டு இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
2014ம் ஆண்டு,கிரீமியாவை ஆக்கிரமித்த ரஷ்யா,2022 ஆம் ஆண்டு, உக்ரைன் மீது இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. மூன்று ஆண்டுகளுக்கும் மேல் தொடரும் ரஷ்யா-உக்ரைன் போரில், பால்டிக் நாடுகள் என்று அழைக்கப்படும் எஸ்டோனியா,லாட்வியா மற்றும் லிதுவேனியாவும் ரஷ்யாவின் தாக்குதலுக்கு இலக்காக உள்ளன.
இந்நிலையில், பின்லாந்து வளைகுடாவில் அமைந்துள்ள Vaindloo வைண்ட்லூ தீவு பகுதியில் உள்ள எஸ்டோனியாவின் வான்வெளியில் ரஷ்யாவின் மிக்-31 ரகப் போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்திருக்கின்றன. தலைநகர் டாலினை நோக்கிச் சென்றதாகவும், சுமார் 12 நிமிடங்கள் வானில் வட்டமிட்டதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாலியின் எஃப்-35 போர் விமானங்கள், ரஷ்யப் போர் விமானத்தை இடைமறித்துத் துரத்தின என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
முன்னதாக, நேட்டோ உறுப்பு நாடுகளான போலந்து மற்றும் ருமேனியாவுக்குள் ட்ரோன்களை அனுப்பிய 7 நாட்களுக்குப் பிறகு, எஸ்டோனியா வானில் ரஷ்யப் போர் விமானம் ஊடுருவி இருப்பது குறிப்பிடத்தக்கது. transponders switch-off செய்யப்பட்ட நிலையில், விமான போக்குவரத்து சேவையுடன் தொடர்பு கொள்ளாமல் நுழைந்ததாக அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இது இந்த ஆண்டில் நான்காவது ரஷ்ய ஊடுருவல் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிநாட்டுக் கொள்கை தலைவர் காயா காலஸ், ரஷ்யாவின் அத்துமீறல் மிகவும் ஆபத்தானது என்றும், அது போர் பதற்றத்தை மேலும் அதிகரிக்கிறது என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நேட்டோ நட்பு நாடுகளிடையேயான ஆலோசனை கூட்டத்தை நடத்த எஸ்டோனிய பாதுகாப்பு அமைச்சர் ஹன்னோ பெவ்கூர் அழைப்பு விடுத்துள்ளார். இதன் அடிப்படையில், நேட்டோவின் முக்கிய அரசியல் முடிவெடுக்கும் அமைப்பான வடக்கு அட்லாண்டிக் கவுன்சில், இது குறித்து விவாதிக்க அடுத்த வாரம் கூடுகிறது என நேட்டோ செய்தித் தொடர்பாளர் அலிசன் ஹார்ட் கூறியுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்த ஊடுருவல் ஒரு பெரிய பிரச்சனையாக மாறும் என்று எச்சரித்துள்ளார். பயிற்று மொழியாக இருந்துவரும் ரஷ்ய மொழிப் படிப்படியாக நீக்கப்படும் என்றும், 2030 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் கல்வி மொழியாக எஸ்டோனிய மொழி மட்டுமே இருக்கும் என்ற சட்டத்தை எஸ்டோனியா அரசு கொண்டு வந்துள்ளது.
மேலும், உள்ளூர் தேர்தல் தொடங்கி நாடாளுமன்றத் தேர்தல் வரை ரஷ்ய மொழிப் பேசுவோருக்கான வாக்களிக்கும் அரசியலமைப்பு உரிமையையும் நீக்கவும் எஸ்டோனிய அரசு முடிவெடுத்துள்ளது. இனி ரஷ்யாவின் அடுத்த ஆக்கிரமிப்பு எஸ்டோனியாவாக இருக்கும் என்று பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
















