அமெரிக்காவின் சர்வாதிகாரியாக அதிபர் ட்ரம்ப் முயற்சிப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. தமக்கு அநீதி இழைத்ததாகத் தாம் நம்பும் நபர்களைப் பழிவாங்க அதிகாரத்தைப் பயன்படுத்துவதாகவும் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில், இரண்டாவது முறையாகத் தாக்குதலுக்குள்ளான ட்ரம்ப், தனது அரசியல் எதிரிகள்,தம்னை கொல்ல பார்க்கின்றனர் என்று குற்றம் சாட்டினார். ஆனால், உண்மையில் ட்ரம்ப் தான் ஜனநாயகக் கட்சியினர்,பத்திரிக்கையாளர்கள், நீதிபதிகள்,உள்ளிட்ட அனைவைரையும் அச்சுறுத்தி உள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
2016-ல் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து இன்று வரை அதிபர் ட்ரம்பின் வன்முறைக் கருத்துக்களைப் பட்டியலிட்டால் அது அனுமார் வால் மாதிரி நீண்டுக் கொண்டே போகும். பல ஆண்டுகளாக, ட்ரம்ப் தமக்கு எதிராகச் செயல்பட்டதாக தான் கருதும் எண்ணற்ற அரசியல் போட்டியாளர்களைத் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறார்.
தனது அரசியல் எதிரிகளை “உள்ளிருந்து வரும் எதிரிகள்” என்று விமர்சனம் செய்யும் ட்ரம்ப்,
சமூகத் தளப் பதிவுகளிலும், மேடைப் பேச்சுகளிலும்,தொலைக்காட்சி நேர்காணலிலும், அரசியல் எதிரிகளைப் பழிவாங்கப் போவதாக ஆவேசமாகச் சபதம் செய்து வருகிறார்.
தனது எதிரிகள் என்று கருதப்படுபவர்களை விசாரிக்க, வழக்குத் தொடர, சிறையில் அடைக்க அல்லது வேறு வழியில் தண்டிக்க 100க்கும் மேற்பட்ட அச்சுறுத்தல்களை ட்ரம்ப் விடுத்துள்ளதாக NPR விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
தனது இரண்டாவது பதவிக் காலத்தின் முதல் 100 நாட்களில், 100க்கும் மேற்பட்ட எதிரிகளைப் பழிவாங்க ட்ரம்ப் அரசு அதிகாரங்களைப் பயன்படுத்தியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றவியல் விசாரணைகளைத் தொடங்கவும், மக்களை ICE தடுப்புக்காவலில் தள்ளவும், நிறுவனங்கள் அரசு ஒப்பந்தங்களைப் பெறுவதைத் தடைச் செய்யவும், பாதுகாப்பு அனுமதிகளை ரத்து செய்யவும், ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யவும், அரசு அதிகாரங்களை ட்ரம்ப் பயன்படுத்தி இருப்பதையும் NPR மதிப்பாய்வு கண்டறிந்துள்ளது.
கடந்த மார்ச் மாதம், நீதித்துறைக்குள் சென்று உரையாற்றிய ட்ரம்ப், தனது நீதித் துறை எதிரிகளை “கழிவு” என்றும், நீதிபதிகளை “ஊழல் மிக்கவர்கள்” என்றும், அவரை விசாரித்த வழக்குரைஞர்களை “குழப்பமானவர்கள்” என்றும் முத்திரைக் குத்தினார். தமக்குப் பின்னால் அமெரிக்க நீதித்துறைச் சின்னத்தை வைத்துக்கொண்டு, தனது அரசியல் எதிரிகளைச் சட்டத்தை மீறுபவர்கள் என்று கூறிய ட்ரம்ப் அவர்களையெல்லாம் சிறைக்கு அனுப்ப வேண்டும் என்றார்.
அமெரிக்காவின் எந்த ஒரு அதிபரும், நீதித்துறையில் இதுபோன்ற ஒரு சர்வாதிகார உரையை நிகழ்த்தியதில்லை. இது நீதித்துறையின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றை முற்றிலும் அவமதிப்பதாகும் என்று கண்டனங்கள் அப்போதே எழுந்தன. ட்ரம்பின் நிறுவனம் மீது மோசடி செய்ததாக நியூயார்க் அட்டர்னி ஜெனரலான ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த லெட்டிடியா ஜேம்ஸ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் 454 மில்லியன் டாலர் அபராதம் செலுத்த ட்ரம்பிற்கு நியூயார்க் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக ஜேம்ஸ் மீது மோசடி வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஜேம்ஸ் மீதான அடமான மோசடி குற்றச்சாட்டுக்குப் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறிய காரணத்துக்காக வர்ஜீனியாவின் எரிக் சீபர்ட் என்ற வழக்கறிஞரை அதிபர் ட்ரம்ப் உடனடியாகப் பணிநீக்கம் செய்துள்ளார்.
முற்றிலும் ஊழல் நிறைந்த அரசியல்வாதியான வஞ்சகர் லெட்டிடியா ஜேம்ஸ், நியூயார்க் மாநில அட்டர்னி ஜெனரல் பதவியில் இருந்து உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று ட்ரம்ப் கூறியுள்ளார். இதே போல், ட்ரம்ப் மீது பதவி நீக்கத் தீர்மானத்தைக் கொண்டு வந்த நாடாளுமன்ற உறுப்பினரான கலிபோர்னியாவின் செனட்டர் ஆடம் ஷிஃப் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தனது எதிரிகள் குற்றவாளிகளாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களைத் துரத்தித் தண்டிக்கும் கருவியாக நீதித்துறையை ட்ரம்ப் பயன்படுத்துகிறார் என்று கண்டனம் தெரிவித்துள்ள ((Senate Minority Leader Chuck Schumer)) செனட் சிறுபான்மைத் தலைவர் சக் ஷுமர், இது சர்வாதிகாரத்துக்கான பாதை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
நீதித் துறை முதல் பாதுகாப்புத் துறை வரை ட்ரம்பின் பழிவாங்கல் நடவடிக்கைகள் தொடர்கிறது. தன்னை விமர்சிப்பவர்கள், தனக்கு விசுவாசம் இல்லாதவர்கள் என்று கருதப்படும் பல இராணுவத் தலைவர்களை ட்ரம்ப் பதவியிலிருந்து நீக்கியுள்ளார். மேலும் சுமார் 100க்கும் மேற்பட்ட முன்னாள் தேசிய பாதுகாப்பு அதிகாரிகளின் பாதுகாப்பு அனுமதிகளையும் ட்ரம்ப் ரத்து செய்துள்ளார்.
பழிவாங்கும் அதிபர் பதவி என்று ஒரு தொலைகாட்சி நேர்காணலில் விமர்சனம் செய்த காரணத்துக்காக, முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த ஜான் போல்டனின் வீட்டை FBI சோதனை செய்துள்ளது.
பழிவாங்குவேன் என்று முன்வைத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதோடு மட்டுமல்லாமல்,தனது தவறுகளைச் சுட்டிக்காட்டி அரசுக்கு எதிராகப் போராடும் மக்களை ஒடுக்குவதற்காக, அமெரிக்க நகரங்களுக்குள் ராணுவத்தை நிறுத்தி வைத்துள்ளார் ட்ரம்ப்.
சட்டம் முடிவடையும் இடத்தில், கொடுங்கோன்மைத் தொடங்குகிறது என அடிக்கடி சொல்லும் ட்ரம்ப் தனது எதிரிகளின் பட்டியலைக் கையில் வைத்து கொண்டு பழிவாங்கிக் கொண்டிருக்கிறார்.
சொந்த நாட்டு மக்களின் நலனை விட ஒரு சில ஊழல் நிறைந்த பணக்காரர்களுக்குச் சேவை செய்யும் ட்ரம்ப், அமெரிக்காவை அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலைக்கு banana republic என்ற நிலைக்குக் கொண்டு செல்கிறார் என்று ஜனநாயகக் கட்சியினர் எச்சரித்துள்ளனர்.