அமெரிக்காவுடன் எண்ணெய் வர்த்தகம் மேற்கொள்ளுமாறு இந்தியாவுக்கு அந்நாட்டு எரிசக்தித்துறை அமைச்சர் கிறிஸ் ரைட் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாகச் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், உலகளவில் ஏராளமான நாடுகள் எண்ணெய் விற்பனை செய்து வரும் நிலையில், ரஷ்யாவிடம் மட்டும் இந்தியா வர்த்தகம் செய்ய வேண்டிய அவசியமில்லையெனத் தெரிவித்தார்.
குறைந்த விலையில் எண்ணெய் கிடைப்பதாலேயே ரஷ்யாவிடம் இந்தியா வர்த்தகம் செய்வதாகக் குறிப்பிட்ட அவர், இந்த வர்த்தகத்தால் பெறப்படும் நிதியை உக்ரைன் மக்களுக்கு எதிராக ரஷ்யா பயன்படுத்துவதை இந்தியா உணர வேண்டும் என வலியுறுத்தினார்.
ரஷ்யாவை தவிர வேறு எந்த நாட்டுடன் வர்த்தகம் மேற்கொண்டாலும், அமெரிக்காவுக்கு சம்மதம் எனவும் கூறினார். இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் நோக்கம் அல்ல எனவும், ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதே காரணம் எனவும் தெரிவித்தார். இந்தியாவுடன் நல்லுறவை பேணவே அமெரிக்கா விரும்புவதாகவும் கிறிஸ் ரைட் தெரிவித்தார்.