சீனாவுடனும், அமெரிக்காவுடனும் பாகிஸ்தான் நட்பு பாராட்டி வருகிறது. இது அந்த நாட்டிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. காரணம் என்ன?. இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்..
ஒருவன் ஒரே நேரத்தில் 2 முயல்களை துரத்தினால், ஒரு முயலைகூட பிடிக்க முடியாது என்பது பழமொழி. அதேபோல, ஒருவன் ஒரே நேரத்தில் 2 குதிரைகளில் சவாரி செய்ய முடியாது என்பதும் நிதர்சனம். ஆனால், பாகிஸ்தான் அரசோ அந்த முயல்களையும் பிடித்து, 2 குதிரைகளிலும் பயணிக்கப் போவதாக ஒற்றை காலில் நிற்கிறது.
அமெரிக்காவுக்கும், சீனாவும் நேர் எதிரான சித்தாந்தம் கொண்ட நாடுகள். இந்த இரு நாடுகளும் தொடக்கம் முதலே பகைமை பாராட்டி வருகின்றன. இந்தச் சூழலில், அமெரிக்காவுடனும், சீனாவுடனும் ஒரே சமயத்தில் நட்பு பாராட்டி லாபம் ஈட்டலாம் என கணக்கு போட்டு வருகிறது பாகிஸ்தான்.
ஆப்ரேஷன் சிந்தூர் முடிவுக்கு வந்ததில் ட்ரம்பின் பங்கு உள்ளதாகக் கூறுவது, வாஷிங்டன்னுக்கு நேரில் சென்று ட்ரம்பை சந்திப்பது, ட்ரம்பிற்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என வாதாடுவது, பலுசிஸ்தீனில் உள்ள கனிமங்களை எடுக்க அனுமதி வழங்குவது என அமெரிக்காவின் கைபாவையாகப் பாகிஸ்தான் மாறி வருகிறது.
மறுபுறம், சீனாவிடம் இருந்து நிதியுதவி பெறுவது, ஆயுத தளவாடங்களை வாங்கி குவிப்பது, முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது என சீனாவுக்கு இணக்கமாக நடக்கவும் பாகிஸ்தான் முயற்சிக்கிறது. சுறுக்கமாகச் சொல்வதென்றால், பனை மரத்துல ஒரு குத்து. தென்ன மரத்துல குத்து. பாகிஸ்தானின் இந்த இரட்டை வேடத்தை அமெரிக்காவும், சீனாவும் நன்கு அறிந்தே உள்ளன. இந்த இரட்டை வேடத்தை அமெரிக்காவும், சீனாவும் எந்த எல்லை வரை அனுமதிக்கும் என்பதுதான் தற்போது எழுந்துள்ள கேள்வி.
இந்திய பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் பகுப்பாய்வு நிறுவனத்தின் உறுப்பினருமான மந்திப் சிங்கு இதுகுறித்து ஐயம் எழுப்பியுள்ளார். சீனா, அமெரிக்கா என்ற இரு பெரும் பாறைகளுக்கு இடையே பாகிஸ்தான் தற்போது சிக்கிகொண்டுள்ளதாக அவர் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், சீனாவுக்கும், அமெரிக்காவுக்குமான மோதல் தவிர்க்க முடியாதது எனக் கூறியுள்ள அவர், அந்த 2 நாடுகளுக்கான போர்க்களமாகப் பாகிஸ்தான் மாறக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள பக்ராம் விமான தளத்தை மீண்டும் கைப்பற்ற அமெரிக்க முயன்று வருகிறது. ஆனால், அவ்வாறு நடப்பதை சீனா ஒருபோதும் அனுமதிக்காது. எனவே, இந்த விவகாரம் கூட அமெரிக்கா -சீனா இடையேயான வெளிப்படையான மோதலுக்கான தொடக்க புள்ளியாக மாறலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர். அத்தகைய சூழல் ஏற்பட்டால், அப்போதும் 2 பேருக்குமே நண்பனாக இருப்பேன் எனக் கூறிக்கொண்டு பாகிஸ்தானால் நிற்க முடியாது.
பாகிஸ்தானுக்கு அமெரிக்கா பல்வேறு உதவிகள் செய்திருந்தாலும், பாகிஸ்தானின் நீண்ட வளர்ச்சிக்குச் சீனாதான் முக்கிய நாடாக இருக்கும் எனச் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். அமெரிக்காவிற்கான முன்னாள் பாகிஸ்தான் தூதரான மலீஹா லோதிகூட அண்மையில் இதே கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். ஆனால், சீனாவோ ஏற்கனவே பாகிஸ்தான் மீது அதிருப்தியில் உள்ளது.
அண்மையில் பெஷாவர் ரயில் திட்டத்திற்கு நிதியளிக்க மறுத்தது, ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் நடத்தப்பட்ட விதம் அனைத்தும் இதற்கான சிறந்த எடுத்துக்காட்டு.
மேலும், பலுசிஸ்தானில் உள்ள கனிம வளங்களை எடுக்க அமெரிக்க நிறுவனங்களுக்குப் பாகிஸ்தான் பச்சை கொடி காட்டியுள்ளது. இப்படி, அமெரிக்காவை கொல்லைபுறம் வழியாக பாகிஸ்தான் உள்ளே அனுமதிப்பதை சீனா சகித்துக்கொள்ளாது என, பாகிஸ்தானிய பத்திரிகையாளரான அடில் ராஜாவும்(Adil Raja) தெரிவித்துள்ளார். எனவே, சீனா விரைவில் பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்டுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.