ஒருமனுஷன் ஓரளவுக்கு பொய் சொல்லலாம், ஏக்கர் கணக்கில் சொல்லக் கூடாது என்று சொல்வதுண்டு. எடுத்ததற்கெல்லாம் பொய்களைச் சொல்லும் ஒரு மனிதர் இருக்கிறார் என்றால் அது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தான். ஐநா சபையில் ஒரு மணி நேரத்துக்கும் மேல் உரையாற்றிய அதிபர் ட்ரம்ப் பேசியதில் உள்ள உண்மை தன்மையைப் பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஐ.நா பொதுச் சபையில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தம் பேச்சில் அமெரிக்க குடியேற்றம், அமெரிக்க பொருளாதாரம், பாலஸ்தீன பிரச்னை உலகில் நடந்து வரும் போர்கள் பற்றியெல்லாம் விவரித்தார். ஐ.நா.சபையையும் மற்ற நாடுகளையும் ஆவேசமாக விமர்சித்தார். ஒரு கட்டத்தில், மேற்கத்திய ஐரோப்பிய நாடுகள் நரகத்துக்குச் செல்கின்றன என்று கடுமையாக சாபம் விட்டார்.
தான் அமெரிக்காவின் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து ஏழு போர்களை நிறுத்தியுள்ளதாகக் கூறிய ட்ரம்ப். இதுவரை எந்த அதிபரும், எந்தப் பிரதமரும் எந்த நாடும் செய்ததில்லை என்று குறிப்பிட்டார்.
மேலும் இந்த 7 போர் நிறுத்தங்களையும் வெறும் 7 மாதங்களில் செய்ததாகத் தெரிவித்தார். ஆனால், உலகில் நடந்துவரும் போர்களைத் தனியாளாக நிறுத்தியதற்கு ஐ.நா- விடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு கூடத் தமக்கு வரவில்லை என்றும் ஆதங்கப் பட்டார்.
ஐநா சபை கடிதம் எழுதுகிறதே ஒழிய அதைப் பின்பற்றுவதில்லை என்று விமர்சித்த ட்ரம்ப், ஐநாவின் வெற்று வார்த்தைகள், எந்தப் போரையும் நிறுத்தாது என்றும் தெரிவித்தார். உண்மையிலேயே ட்ரம்ப் எந்தப் போரை நிறுத்தினார் என்று பார்த்தால், அவர் குறிப்பிட்ட ரஷ்யா-உக்ரைன் போர், கம்போடியா-தாய்லாந்து போர், கொசோவோ-செர்பியா போர், காங்கோ-ருவாண்டா, இந்தியா-பாகிஸ்தான் போர், இஸ்ரேல்-ஈரான் போர், இஸ்ரேல்-காசா போர் போன்றவற்றில் இன்னமும் பல போர்கள் நடந்து கொண்டுதான் உள்ளன. இந்தப் பொய் போதாதென்று தம் உரையில் தவறான புள்ளிவிவரங்களையும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
எடுத்துக்காட்டாக, ரஷ்யா உக்ரைன் போரில் ஒவ்வொரு வாரமும் 7,000 இளம் வீரர்கள் இருதரப்பிலும் கொல்லப் படுகின்றனர் என்று கூறினார். ஆனால் உண்மையில், கடந்த 3 ஆண்டுகளாக நடந்துவரும் ரஷ்ய உக்ரைன் போரில், மொத்தம் 3, 45,100 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அதாவது ஒரு வாரத்துக்குச் சுமார் 1,848 பேர் கொல்லப்பட்டுள்னர். இதே போல், முந்தைய ஜோ பைடன் ஆட்சியில், அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக வந்த 300,000 க்கும் குழந்தைகளைக் காணவில்லை என்று ட்ரம்ப் கூறினார். ஏற்கெனவே, அமெரிக்க குடியேற்ற கவுன்சிலின் மூத்த உறுப்பினரான Aaron Reichlin-Melnick, ஆரோன் ரீச்லின்-மெல்னிக்,அந்தக் குழந்தைகளின் SPONSOR-கள் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை.
அதனாலேயே அந்தக் குழந்தைகளை காணவில்லை அல்லது கொன்று விட்டார்கள் என்று சொல்ல முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். அடுத்ததாக, லண்டனின் புதிய மேயரான சாதிக் கான் ஒரு பயங்கரமானவர் என்றும் அவர் லண்டனில் இஸ்லாமிய ஷரியா சட்டத்தை அமல் படுத்த உள்ளனர் என்றும் ட்ரம்ப் கூறினார்.
தகுந்த ஆதாரம் இல்லாமல் ட்ரம்ப் பேசியுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க பொருளாதாரத்தைப் பேரழிவில் இருந்து தான் காப்பாற்றியதாக ட்ரம்ப் தெரிவித்ததும் அப்பட்டமான பொய் என்று தரவுகள் தெரிவிக்கின்றன.
மே மாதத்திலிருந்து பணவீக்கம் மிகவும் மோசமடைந்து ஆகஸ்ட் மாதத்தில் சுமார் 2.9 சதவீதமாகி உள்ளது. மேலும், அமெரிக்காவில் மளிகை பொருட்களின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக ட்ரம்ப் தனது ஐநா உரையில் தெரிவித்திருந்தார்.
உண்மையில் கடந்த ஆகஸ்ட் மாத நிலவரப்படி, ஒட்டுமொத்த மளிகைப் பொருட்களின் விலைகள் 2.7 சதவீதம் உயர்ந்துள்ளன. அதிபர் ட்ரம்ப், புவிசார் அரசியலையும் ஒரு வியாபாரமாகவே பார்க்கிறார்.
ட்ரம்ப் தனது லாபத்துக்கு ஏற்ப எதையும் பேசுகிறார், எதையும் செய்கிறார், எதையும் நிராகரிக்கிறார், எதையும் அரவணைக்கிறார் என்று விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஐநா மற்றும் உலக நாடுகள் ட்ரம்பை, நம்பவும் முடியாமல், விலகவும் முடியாமல் அவருக்கேற்ப நடக்கவும் முடியாமல் தவிக்கின்றன.
















