இந்தியாவின் ‘ஸ்டீல் மேன்’ என்றழைக்கப்படும் விஸ்பி கராடி 261 கிலோ எடைகொண்ட ஹெர்குலீஸ் தூண்களை 67 விநாடிகள் தாங்கிப் பிடித்தது கின்னஸ் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அட்டாரி – வாகா எல்லையில் கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி, இந்தியாவின் ‘ஸ்டீல் மேன்’ என்றழைக்கப்படும் விஸ்பி கராடி ஒரு உலக சாதனையை மேற்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டார்.
அதற்காக 261 கிலோ எடைகொண்ட ஹெர்குலீஸ் தூண்களை ஒரு நிமிடம் தாங்கிப் பிடிக்கும் முயற்சியில் கராடி ஈடுபட்டார். இந்த நிகழ்வை அங்குத் திரண்டிருந்த ஏராளமான மக்கள் கண்டு ரசித்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் விஸ்பி கராடி 67 விநாடிகள் தூண்களை தாங்கிப் பிடித்து அசத்தினார்.
261 கிலோ என்பது ஒரு துருவக் கரடியின் பாதி எடைக்குச் சமம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்கள் பிரிவில் இதுவரை யாரும் இத்தகைய எடையைத் தாங்கியதில்லை என்பதால், விஸ்பியின் இந்தச் சாதனை கின்னஸ் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தனது 17-வது கின்னஸ் சாதனையை நிறைவு செய்துள்ள விஸ்பி, தனது இந்தச் சாதனையை இந்திய ஆயுதப்படைகளுக்கு அர்பணிப்பதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
(ப்ரீத்) முன்னதாக விஸ்பி கராடி கடந்த 2019-ல், இரும்பு கம்பிகளைக் கழுத்தால் வளைத்தும், 2022-ல் ஆணி படுக்கையில் படுத்தபடி 528 கிலோ கான்கிரீட் கல்லை உடைத்தும், 2025-ல் ஆயிரத்து 819 கிலோ எடையைத் தாங்கியும் பல கின்னஸ் சாதனைகளைப் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.