இந்தியாவில் முதல்முறையாக ரயிலில் இருந்து ஏவப்பட்ட அக்னி பிரைம் ஏவுகணை வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டுள்ளது. நகரும் ரயில்களின் மூலம் ஏவுகணைகளை ஏவும் அமைப்பை உருவாக்கிய நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
ரயிலில் இருந்து காற்றை கிழித்துக் கொண்டு சீறிப்பாய்ந்த இந்த ஏவுகணைதான் அக்னி-பிரைம்….பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அக்னி ஏவுகணைகள்,. கடந்த 2011ம் ஆண்டு முதல் இந்திய ராணுவத்தின் வலிமையை பறைசாற்றி வருகின்றன.
அதனை எதிர்காலத்திற்கு ஏற்ப, அடுத்த தலைமுறை ஏவுகணைகளாக மெருகேற்றி வருகிறது DRDO… அந்த வகையில் 2000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கைத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்ட, கண்டம் விட்டுக் கண்டம் பாயக்கூடிய அக்னி பிரைம் ஏவுகணையை வெற்றிகரமாகப் பரிசோதித்துள்ளது இந்தியா.
அக்னி-பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி இந்தியா ராணுவத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ள நிலையில், DRDO மற்றும் பாதுகாப்பு படையினரை மனமுவந்து பாராட்டியுள்ளார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங். பல்வேறு மேம்பட்ட அம்சங்களை கொண்ட அக்னி-பிரைம் ஏவுகணை, இதற்காகவே வடிவமைக்கப்பட்ட சிறப்பு ரயில் லாஞ்சர் மூலம் ஏவப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வித தடையும் இன்றி எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லக் கூடிய அக்னி-பிரைம் ஏவுகணை தெரிவு நிலை குறைந்த பகுதியிலும், குறுகிய நேரத்திலும் எதிர்வினையாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த சாதனையை நிகழ்த்திய DRDO மற்றும் ஆயுத படைகளுக்கு வாழ்த்துகள் என்றும் தனது எக்ஸ் பக்கத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
மேலும் இந்த வெற்றிகரமான சோதனை, நகரும் ரயில் ஏவுதளத்தை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவையும் இணைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அக்னி ஏவுகணைகளில் பல வகைகள் உள்ளன. அதில் சில ஏவுகணைகள் 3500 கிலோ மீட்டர் முதல் 5000 கிலோ மீட்டர் தொலைவு சென்று இலக்கை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. அணுஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது மட்டுமல்லாமல், எங்கு தேவையோ அங்கு கொண்டு சென்று பயன்படுத்த முடியும் என்பதுதான் அக்னி ஏவுகணைகளின் சிறப்பம்சமே..!
அக்னி-பிரைம் போன்ற பெரும்பலான மேம்பட்ட ஏவுகணைகளை ஆங்காங்கே நகர்த்துவது சுலபமானது அல்ல. எனவேதான் அவை வழிவழியாக நிலையான ஏவுதளத்தில் இருந்து ஏவப்படுகின்றன. ஆனால், ரயில் லாஞ்சர் தொழில்நுட்பமோ, ஏவுகணைகளை எங்கும் எளிதில் எடுத்துச் சென்று இலக்குகளை குறிவைக்கும் தேர்வை இந்திய ராணுவத்திற்கு வழங்குகிறது.
ஏவுகணைகளை ஒரே இடத்தில் வைத்திருப்பதன் மூலம் அவை தாக்குதலுக்கு ஆளாகக் கூடிய அபாயம் உள்ளதாகக் கூறும் பாதுகாப்பு நிபுணர்கள், அவற்றை நகரும் வாகனங்களுக்கு மாற்றுவது முன்கூட்டியே தாக்குதலுக்கு ஆளாகும் வாய்ப்பைக் குறைப்பதாகவும் கூறுகின்றனர்.
நாட்டின் தற்போதைய ரயில் வலையமைப்பின் காரணமாக, தேவைப்படும் நேரங்களில் ஏவுகணைகளை விரைவாக அணிதிரட்ட முடியும். செயற்கைக்கோள் கண்காணிப்பில் இருந்து சுரங்கப்பாதைகளில் அவற்றை மறைத்து வைக்கவும் முடியும்… உண்மையில் ரயில் லாஞ்சர் தொழில்நுட்பம் பனிப்போர் காலத்திலிருந்தே இருந்து வருகிறது.
அப்போதைய சோவியத் யூனியனும், அமெரிக்காவும் ரயிலில் இருந்து ஏவுகணை ஏவும் திட்டத்தை பற்றிய முன் முயற்சிகளை மேற்கொண்டன. 1950-களில் அமெரிக்கா Minuteman ஏவுகணைகளை, ரயிலில் இருந்து செலுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்தது.
1961ம் ஆண்டு அந்த முயற்சியை கைவிட்டது. 1980ம் ஆண்டுகளில் ரயில் மொபைல் லாஞ்சர்களில் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை நிலைநிறுத்தும் திட்டத்தை மீண்டும் பரிசீலித்தது. எனினும் சோவியத் யூனியன் உடைந்த பிறகு இத்திட்டத்தை ரத்து செய்தது. இதே போன்று ரஷ்யாவும் RT-23 Molodets என்ற அமைப்பை ரயிலில் நிலைநிறுத்தியது. சோவியூத் யூனியன் உடைந்த பின்னர், ஆயுதக்குறைப்பு ஒபந்தத்தின்படி, அவைகள் அகற்றப்பட்டன.
இதே போன்று 2016ம் ஆண்டு DF-41 ரயில் மொபைல் லாஞ்சரை ரஷ்யா சோதித்ததாகவும், வடகொரியாவும் குறுகியதூர ஏவுகணைகளை ரயிலில் இருந்து ஏவி சோதனை மேற்கொண்டதாகவும் தகவல் செய்திகள் வெளியானது. சீனா, பாகிஸ்தான் நாடுகளில் உள்ள எந்த இலக்கையும் அக்னி ஏவுகணைகளால் குறிவைக்க முடியும்.
கடலுக்கு அடியில் அணுஆயுதங்களை சுமந்து கொண்டு தாக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணைகள், தரைப்பரப்பு, வான்பரப்பு மட்டுமன்றி தற்போது ரயில் லாஞ்சர் மூலமாகவும் பரிசோதிக்கப்பட்டிருப்பது இந்தியாவுக்கு புதிய உத்வேகத்தை அளித்திருக்கிறது.