உலகம் எதிர்கொள்ளும் இடையூறுகளுக்கு மத்தியில் இந்தியாவின் வளர்ச்சி அனைவரையும் ஈர்க்கும் வகையில் உள்ளதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் கவுதம புத்த நகர் மாவட்டத்தில் உள்ள கிரேட்டர் நொய்டாவில் 5 நாட்கள் நடைபெறும் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.
அப்போது, கண்காட்சியில் தயாரிப்புகளை காட்சிக்கு வைத்துள்ள தொழில் முனைவோர்களிடம் பிரதமர் மோடி கலந்துரையாடினார். சர்வதேச வர்த்தக கண்காட்சியில் 2 ஆயிரத்து 400க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, சிப் முதல் கப்பல் வரை அனைத்து பொருட்களையும் இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும் என்பது மத்திய அரசின் நோக்கம் எனத் தெரிவித்தார்.
தற்போது, இந்தியாவில் தயாரிக்கப்படும் செல்போன்களில் 55 சதவீதம் உத்தரப்பிரதேசத்தில் தயாரிக்கப்படுகிறது என்றும், செமி கன்டக்டர் துறையிலும் இந்தியா வலிமையடைந்து வருகிறது எனவும் கூறினார்.
ரஷ்யாவுடன் இணைந்து ஏகே 203 ரக துப்பாக்கிகளைத் தயாரிக்கும் ஆலை உத்தரப்பிரதேசத்தில் நிறுவப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். உள்ளூர் வியாபாரிகள் முதல் பெரும் தொழிலதிபர்கள் வரை யுபிஐயைப் பயன்படுத்தி வருவாய் ஈட்டுகின்றனர் எனக் கூறிய அவர், 2047க்குள் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி முன்னேறி வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், ஜிஎஸ்டி வரி குறைப்பால் நாட்டு மக்களின் வருமானம் மற்றும் சேமிப்பை உயர்த்தி உள்ளதாகக் கூறிய பிரதமர் மோடி, ஜிஎஸ்டி மறுசீரமைப்பு தொடர்ந்து நடக்கும் எனத் தெரிவித்தார்.