ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சிபிஐக்கு ஏன் மாற்ற உத்தரவிடப்பட்டது என்பதற்கான காரணங்களை, உயர் நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன், தனது உத்தரவில் பட்டியலிட்டுள்ளார்.
நீதிபதி வேல்முருகன் பிறப்பித்த 21 பக்க தீர்ப்பில், வழக்கு ஆவணங்களை ஆய்வு செய்ததில், விசாரணை குறித்து நியாயமான சந்தேகங்கள் எழுகின்றன என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வழக்கின் புலன் விசாரணையில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ, ஊடகங்கள் மற்றும் அரசியல் காரணங்கள் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம் எனத் தெரிவித்த நீதிபதி, கொலைக்கான காரணங்கள் என, முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள விஷயங்களுக்கும், குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ள விஷயங்களுக்கும் வேறுபாடுகள் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
முக்கியமாக குற்றம்சாட்டப்பட்ட நபர்களான சம்போ செந்தில் மற்றும் மொட்டை கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்படமால் இருப்பது, விசாரணை முழுமையாக நிறைவடைந்துவிட்டதா? என்ற சந்தேகத்தை எழுப்புகிறது எனத் தெரிவித்த நீதிபதி,
கொலைக்கான நோக்கம், பின்னணி மற்றும் சதி குறித்து காவல்துறையினர் புலன் விசாரணையை நடத்தவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங்கின் சமூக முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, நியாயமான, பாரபட்சமற்ற விசாரணை தேவைப்படுகிறது எனத் தெரிவித்த நீதிபதி, முக்கிய சாட்சிகளை விசாரிக்காமல் தவிர்த்தது உள்ளிட்ட காரணங்களால், வழக்கின் முழுமையான நம்பிக்கையை பெற முடியவில்லை எனவும் தீர்ப்பில் கூறியுள்ளார்.
வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும் கூட, விசாரணையில் உள்ள குறைகள் விசாரணையின் முழுமைத்தன்மை குறித்து கேள்வி எழுப்புகிறது எனத் தெரிவித்த நீதிபதி, செம்பியம் போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்து, வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.