திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தடுப்பூசி போட்டதால் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊசிதோப்பு பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்குமார் – கிருத்திகா தம்பதியின் ஒன்றரை வயது மகன் பூமீசுக்கு அப்பகுதியில் உள்ள அங்கன்வாடியில் நடைபெற்ற முகாமில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தநிலையில் குழந்தை பல மணி நேரமாகியும் எழுந்திருக்காததால் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதனிடையே தடுப்பூசி போட்டதால்தான் குழந்தை உயிரிழந்ததாக கூறி வாணியம்பாடி – ஆலங்காயம் சாலையில் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். எனினும் அவர்கள் தொடர்ந்து போராடியதால் உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.