மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது.
மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கருங்காலக்குடி, சூரக்குண்டு, கீழையூர், திருவாதவூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதன் காரணமாக பள்ளி, அலுவலங்களில் இருந்து வீடு திரும்பிய மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர், மழையில் நனைந்தபடியே சென்றனர். மேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒருவாரமாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது பெய்த மழையால் அங்கு குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, பள்ளிமடம், காரேந்தல், தமிழ்பாடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது. வடிகால் வசதி இல்லாததால் திருச்சுழி – அருப்புக்கோட்டை சாலையில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.
இதேபோல் தேனி நகர பகுதிகளான அரண்மனை புதூர், அல்லிநகரம், அன்னஞ்ஜி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலையில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.
திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான வேங்கிக்கால், ஆடையூர், அத்தியந்தல், புனல்காடு உள்ளிட்ட இடங்களில் சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. தற்போது பெய்த மழையால் அங்கு வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கொண்டமநாயக்கன்பட்டி, சண்முகசுந்தரபுரம், கரிசல்பட்டி உள்ளிட்ட இடங்களில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. தற்போது பெய்த மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் எனவும், இதனால் மானாவாரி பயிர்கள் நன்கு வளரும் என்றும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
தொடர் மழையால் கன்னியாகுமரி நகர் பகுதியில் உள்ள சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மேம்பாலத்தில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால் மழைநீரில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.