அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் காப்புரிமை பெற்ற மருந்துகளுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்துள்ளார். இது, இந்தியாவின் மருந்துத் தொழில் துறையைப் பாதிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இந்திய மருந்து உற்பத்தி நிறுவனங்களின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாக அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவின் மொத்த மருந்து இறக்குமதியில் இந்தியாவின் பங்கு 6 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது.
2024ம் ஆண்டில் 77,231 கோடி ரூபாய் மதிப்புள்ள மருந்துப் பொருட்களை இந்தியா, அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. மேலும், இந்த ஆண்டின் முதல் பாதியில், 32,505 கோடி ரூபாய் மதிப்புடைய மருந்துப் பொருட்களை இந்தியா அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. சொல்லப்போனால் அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் 10 மருந்துகளில் ஒன்று இந்திய மருந்து ஆக உள்ளது.
ஜெனரிக் மருந்துகள் தயாரிக்க கூடிய இந்திய மருந்து நிறுவனங்களின் 50 சதவீத வருமானம் அமெரிக்க சந்தையில் இருந்துதான் வருகிறது. 2022 ஆம் ஆண்டில் மட்டும் அமெரிக்க சுகாதார அமைப்புக்கு இந்தியாவின் மருந்துகளால் 219 பில்லியன் டாலர்கள் சேமிக்கபட்டுள்ளது என்றும், அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்தியாவின் ஜெனரிக் மருந்துகள் கூடுதலாக 1.3 டிரில்லியன் டாலர்களை சேமிக்க உதவும் என்றும் அமெரிக்க சுகாதாரத்துறை மதிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் காப்புரிமை பெற்ற மருந்துகளுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும் என அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்த வரி விதிப்பிலிருந்து விலக்கு பெற, மருந்து நிறுவனங்கள் அமெரிக்காவில் உற்பத்தி தொழிற்சாலைகளைத் தொடங்க வேண்டும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
காப்புரிமை பெற்ற மருந்துகள் மீதான வரி விதிப்பைத் தொடர்ந்து, ஆசியாவில் பல நாடுகளின் மருந்து நிறுவனங்களின் பங்குகள் வெகுவாகச் சரிந்துள்ளன. இந்தியாவின் மருந்து நிறுவனங்களில் பங்கும் சரிந்துள்ளன.
குறிப்பாகச் சன் பார்மா பங்குகள் 1.79 சதவீதம் குறைந்துள்ளது. அமெரிக்காவுக்கு மருந்துகளை ஏற்றுமதி செய்வதை வெளிநாட்டு மருந்து நிறுவனங்கள் நிறுத்தினால், அமெரிக்காவின் சுகாதாரத் துறை வெகுவாகப் பாதிக்கப்படும் என்றும் அமெரிக்காவில் மருந்துகளின் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகமாகும் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதனால் ஏற்கனவே, பின் தங்கி உள்ள அமெரிக்காவின் சுகாதாரத்துறை மேலும் பாதிப்படையும் என்றும் கூறியுள்ளனர். ஏற்கெனவே இங்கிலாந்து, ஐரோப்பா மற்றும் ஜப்பானுடன் வர்த்தக ஒப்பந்தங்களில் அமெரிக்கா கையெழுத்திட்டுள்ளது. அந்நாடுகளுக்கு அதிக பட்சம் 15 சதவீத வரி விதிக்கப் பட்டிருக்கிறது.
ஐரோப்பாவில் தங்கள் இருப்பை வைத்துள்ள அனைத்து மிகப்பெரிய பன்னாட்டு மருந்து நிறுவனங்களும் இனி அங்கிருந்து அமெரிக்காவுக்கு மருந்துகளை ஏற்றுமதி செய்வார்கள். மருந்து இறக்குமதிகள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதா? என அமெரிக்க வர்த்தகத் துறை விசாரணைக்கு உத்தரவிட்டது.
இந்த விசாரணையின் இறுதி அறிக்கை வரும் டிசம்பர் 27ஆம் தேதி, வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்த அறிக்கையின் மீதான அதிபரின் முடிவு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜெனரிக் மருந்துகள் விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விசாரணை இந்திய மருந்து நிறுவனங்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.
மருந்துகள் இறக்குமதி மீதான வரியுடன், சமையலறை மற்றும் கழிவறை உபகரணங்களுக்கு 50 சதவீதம் பர்னிச்சர்களுக்கு 30 சதவீதம், கனரக லாரிகளுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்றும் ட்ரம்ப் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். ட்ரம்பின் இந்த நடவடிக்கைகள், அமெரிக்காவில் பணவீக்கம் இன்னும் மோசமாக்கும் என்று அமெரிக்க பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.