தொழில்துறையில் லட்சக்கணக்கான ரோபோக்களை களமிறக்கி அசைக்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளது சீனா. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்….
சீனா… தொழில்நுட்ப பயன்பாடு என்று வந்துவிட்டால் எப்போதும் போட்டி போட்டு முன்னிலை வகிக்கும். இனி தொழில்நுட்பம் தான் உலகை நகர்த்தும் என்பதை துல்லியமாகக் கணித்து, அதற்கு ஏற்ற பாணியைத் தேர்ந்தெடுத்து வலம் வருகிறது.
அதுவும் தொழில்துறை என்று வந்துவிட்டால் டெக்னாலஜியை பயன்படுத்துவதில் சீனா படு ஸ்மார்ட். மனிதர்களை மட்டும் நம்பியிருந்தால் உற்பத்தியைப் பெருக்க முடியாது என்பதை சரியாகப் புரிந்து கொண்டு எக்கச்சக்கமான ரோபோக்களை களமிறக்கி செயல்பட்டு வருகிறது.
என்ன ஒரு ஆயிரம் ரோபோக்கள் இருக்குமா என்று குறைத்து மதிப்பிட வேண்டாம். ஏறத்தாழ 20 லட்சம் ரோபோக்களை தொழில்துறையில் ஈடுபடுத்தி திகைக்க வைக்கிறது. மற்ற நாடுகள் பயன்படுத்தும் ரோபோக்களை ஒட்டுமொத்தமாகக் கூட்டி பார்த்தாலும், சீனாவின் எண்ணிக்கையை நெருங்கக் கூட முடியாது.
சர்வதேச ரோபாடிக்ஸ் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையின் படி, 2024-ம் ஆண்டில் மட்டும் 3 லட்சம் ரோபோக்களை களமிறக்கி ஆச்சரியப்பட வைத்துள்ளது சீனா. போட்டி நாடான அமெரிக்காவோ, வெறும் 30 ஆயிரம் ரோபோக்களை தான் பயன்படுத்தி இருக்கிறது. தானியங்கி முறையில் பொருட்களை உற்பத்தி செய்வதில் சீனா எவ்வளவு கண்ணும் கருத்துமாக உள்ளது என்பதை இந்த அறிக்கை தெள்ள தெளிவாகக் காட்டுகிறது.
தொழில்துறையில் அதிக ரோபோக்களை பயன்படுத்தும் நாடு என்ற பெருமைக்காக மட்டும் சீனா இதனைச் செய்யவில்லை. ரோபோ பயன்பாட்டால் அந்நாடு அடைந்த லாபங்களை சொல்லிக்கொண்டே போகலாம். குறிப்பாக, ரோபோ பயன்பாட்டிற்கு பெயர் பெற்ற ஜப்பானை பின்னுக்கு தள்ளி, அந்த நாட்டின் மார்க்கெட்டை எல்லாம் தன் பக்கம் ஈர்த்துள்ளது.
கண்ணாடி உற்பத்தியில் அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன், தென்கொரியா, ஜெர்மனி போன்ற நாடுகளையெல்லாம் கீழே சாய்த்து, தன் கொடியைப் பறக்கவிட்டுள்ளது சீனா. மற்ற நாடுகளும் இந்த ஐடியாவை பின்பற்றலாமே என்றால், அந்த இடத்தில் தான் சீனா தனித்துவமாகத் தெரிகிறது. ரோபோக்களை தயாரிக்கும், நிர்வகிக்கும், பழுதுபார்க்கும் பணியாளர்கள் சீனாவில் ஏராளம். ஏதாவது, சிறு பாதிப்பு என்றாலும் கூட தொய்வின்றி பணிகள் நடைபெறுவதற்கான சூழலை அந்நாடு ஏற்கனவே உருவாக்கி வைத்துள்ளது.
தற்போது ட்ரெண்ட்டில் உள்ள ARTIFICIAL INTELLIGENCE-லும் கைதேர்ந்து இருப்பது கூடுதல் பிளஸ் பாய்ண்ட். இப்படி ரோபாடிக்ஸ் மற்றும் ARTIFICIAL INTELLIGENCE-ஐ ஒருசேர புகுத்தி, தொழில்துறையில் அசைக்க முடியாத இடத்தைப் பிடித்துள்ள சீனா, பிற முன்னேறிய நாடுகளுக்குச் சவால் விடுத்து வருகிறது என்றே கூறலாம்.