சீமை கருவேல மரங்களை அகற்றும் உத்தரவை தமிழக அரசு முழுமையாக அமல்படுத்தவில்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சீமைக் கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட கோரிய மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீர்நிலைகள் மற்றும் வனப்பகுதிகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்காக கணக்கெடுக்க 3 மாத கால அவகாசம் வேண்டும் என அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், மரங்களை அகற்றுவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும்.,ஆனால் இதுவரை அந்த உத்தரவை முழுமையாக அமல்படுத்தப்படவில்லை எனவும் தெரிவித்தனர்.
சீமை கருவேல மரங்களை அகற்றுவது ஒன்றும் ராக்கெட் சயின்ஸ் அல்ல என சாடிய நீதிபதிகள், நிதி ஒதுக்காமல் மரங்களை வெட்டி ஏலம் விடுவதன் மூலம் அரசு வருவாய் ஈட்டலாம் எனவும் யோசனை தெரிவித்தனர்.
வடகிழக்கு பருவமழையை காரணம் காட்டி, மரங்களை அகற்றுவதை தள்ளி வைக்க முடியாது எனவும் திட்டவட்டமாக கூறினர்.
மேலும், சீமை கருவேல மரங்களை முற்றிலும் அகற்றுவது தொடர்பான திட்டத்தை அக்டோபர் 10ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கெடு விதித்த நீதிபதிகள், உரிய பதில் அளிக்காவிட்டால் நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பிக்க நேரிடும் எனவும் எச்சரித்து விசாரணையை தள்ளி வைத்தனர்.