கன்னியாகுமரி மாவட்ட மலையோர பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், பாதுகாப்பு கருதி குழித்துறை சப்பாத்து பாலத்தில் 3-வது நாளாக போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தின் மலையோர பகுதிகளில் கடந்த 2 நாட்களுக்கும் மேலாக மழை நீடித்து வருகிறது. கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், களியல் தடுப்பணை நிறைந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதேபோல பரளியாறு, தாமிரபரணி ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளதால், குழித்துறை சப்பாத்து பாலத்தின் மீது தண்ணீர் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் அவ்வழியாக போக்குவரத்துக்கு தொடர்ந்து 3-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பாலத்தின் இருபுறங்களிலும் தடுப்பு வேலிகள் அமைத்து கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல, வெள்ளப்பெருக்கு காரணமாக ஆறுகளில் பொதுமக்கள் குளிக்கவும் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.