உலக சுற்றுலா தினம் கொண்டாடப்படும் நிலையில் தமிழகத்தின் தனித்துவமிக்க சுற்றுலாத் தளமான நீலகிரி மாவட்டம் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் அவலநிலையில் காட்சியளிக்கிறது. உலகளவிலான மக்கள் விரும்பி வரும் சுற்றுலாத் தளமான நீலகிரி மாவட்டத்தின் சுற்றுலா வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் சுமார் 50 சதவிகிதம் வனப்பகுதியை உள்ளடக்கி தமிழகம், கேரளம், கர்நாடகா என மூன்று மாநிலங்களை இணைக்கும் மாவட்டமாக நீலகிரி திகழ்ந்து வருகிறது. உலக சுற்றுலா வரைபடத்தில் தவிர்க்க முடியாத இடத்தை தக்க வைத்திருக்கும் நீலகிரி மாவட்டத்தில் அரசு தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா சிகரம், படகு இல்லம், பைக்காரா படகு இல்லம், முதுமலை புலிகள் காப்பகம் என ஏராளமான சுற்றுலாத்தளங்கள் அமைந்துள்ளன.
அத்தகைய சிறப்புமிக்க சுற்றுலாத்தளமான நீலகிரியில் சுற்றுலாவை மேம்படுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.
சுற்றுலா நகரம் என அழைக்கப்படும் உதகையில் உள்ள சுற்றுலாத் தளங்களை காண தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.
மிக குறுகிய நகரமான உதகையில் போதிய பார்க்கிங் வசதி இல்லாமலும், சாலைகளில் வழிந்தோடும் கழிவுநீராலும் அதன் தனித்தன்மையை இழந்து வருகிறது. அண்மையில் படகு இல்லத்தை தூர்வார 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், அதற்கான பணிகள் முறையாக நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது
உதகை நகராட்சியில் தலா 19 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட 71 சமுதாயக் கழிப்பிடங்கள் முறையான பராமரிப்பின்றி பொதுமக்கள் பயன்படுத்தவே முடியாத அளவில் அவல நிலையில் காட்சியளிக்கின்றன.
சுற்றுலாப் பயணிகளின் வருகை நாளுக்கு நாள் குறைந்து வருவதால் சுற்றுலாத் தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் வாகன ஓட்டுநர்கள் மற்றும் நடைபாதை வியாபாரிகளின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் அளவுக்கு அதிகமாக கட்டணங்கள் வசூலிக்கப்படுவதும் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்தி சுற்றுலாப் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தருவதோடு, இ பாஸ் நடைமுறையை தளர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் பரவலாக எழுந்துள்ளது.