தேனியில் தொடங்கி ராமநாதபுரத்தில் நிறைவடையும் வைகையாறு மதுரையை கடக்கும்போது கழிவுநீர் கலந்து சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. புனித நதிகளில் ஒன்றாகக் கருதப்படும் வைகை ஆற்றில் கலக்கப்படும் கழிவுநீரை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் வருசநாடு மலைத்தொடரில் பிறக்கும் வைகை ஆறு, மதுரை, சிவகங்கை மாவட்டங்கள் வழியாகச் சுமார் 250 கிலோ மீட்டர் பயணித்து ராமநாதபுரம் கண்மாயில் தன் பயணத்தை நிறைவு செய்கிறது. கடலில் கலக்காத ஒரே நதி எனும்பெயரைப் பெற்றற வைகை நதி தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயத் தேவையோடு குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது.
இலக்கியங்களில் பாடப்பட்ட பெருமைக் கொண்ட வைகை நதி, மதுரை மாநகருக்குள் நுழைவதில் தொடங்கி மாநகரை கடக்கும் வரையிலான 120கிலோ மீட்டர் தூரம் அதிகளவில் மாசுபடுத்தப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. கழிவுநீர் கலப்பதோடு, பிளாஸ்டிக் குப்பைகள், கட்டட மற்றும் இறைச்சிக் கழிவுகள் கலக்கப்படுவதால் வைகை ஆறு மாசடைந்து சுகாதார சீர்கேடு எழுந்துள்ளது.
வைகையாற்றை காக்கவும், மாசடைவதை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்ட நிலையிலும், 30க்கும் அதிகமான இடங்களில் கழிவுநீர் கலந்து வருகிறது. வைகை ஆற்றிலிருந்து விவசாயத்திற்கும், குடிநீர் தேவைக்காகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டிருக்கும் நிலையில், மற்றொரு புறம் மதுரை மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் வைகையாற்றில் கழிவுநீர்கலப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வைகை ஆற்றைப் பாதுகாக்க சிசிடிவி கேமிராக்கள் பொருத்த வேண்டும், கழிவுகளைக் கொட்டும்நபர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்எனச் சமூகக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், வைகைஆற்றைப் புதுப்பிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
மழைநீர் கால்வாய் குழாய்கள் வழியாகக் கழிவுநீர் வைகையாற்றில் கலக்கும் நிலையில் அதனை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இறைச்சிக் கழிவுகளை கொட்டுவோர் மீது அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் துணை மேயர் நாகராஜன் தெரிவித்துள்ளார் ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், பாசனத் தேவையை பூர்த்தி செய்வதிலும் முக்கிய பங்கு வகிக்கும் வைகையாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக மதுரை மாநகராட்சி நிர்வாகமும் தமிழக அரசும் கூடுதல் கவனம் செலுத்தி வைகை ஆற்றை பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.