வரும் டிசம்பர் மாதத்தில் ரஷ்ய அதிபர் புதின் இந்தியா பயணம் மேற்கொள்ள உள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வரி விதிப்புக்கிடையே புதினின் இந்திய சுற்றுப்பயணம் சர்வதேச அரசியலில் பேசுபொருளாகி உள்ளது. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்..
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியாவை அச்சுறுத்த நினைக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ச்சியாகப் பல அழுத்தங்களைக் கொடுத்து வருகிறார். நான் உத்தரவிட்டால் அதைச் செய்தே ஆக வேண்டும் என்று நிலைப்பாடு கொண்டவராக இருக்கும் ட்ரம்ப், இந்தியாவை தன் வழிக்குக் கொண்டு பல்வேறு குட்டி கலாட்டா வேலைகளைச் செய்து வருகிறார்.
இந்திய பொருட்களுக்கு முதலில் 25 சதவீத வரி விதித்த ட்ரம்ப், பின்னர் கூடுதலாக 25 சதவீத வரி விதித்து நடவடிக்கை மேற்கொண்டார். ரஷ்யா உடனான இந்தியாவின் கச்சா எண்ணெய் வர்த்தக நிதி, உக்ரைனுக்கு எதிரான போரில் பயன்படுத்தப்படுவதாகவும், போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றால், இந்தியா வேறு நாடுகளுடன் எண்ணெய் வர்த்தகம் மேற்கொள்ள வேண்டும் என்றும் ட்ரம்ப் நிர்பந்தித்தார்.
ஆனால், ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிபர்களுடன் நடத்திய போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டிருக்காமல், சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றி மாற்றிக் கருத்து தெரிவித்து ட்ரம்ப் குழப்பத்தை ஏற்படுத்தினார். இதனையடுத்து, இந்தியா மீது ட்ரம்ப் குறி வைத்திருப்பது உண்மையிலேயே போர் நிறுத்தத்திற்காகவா? அல்லது பொருளாதார காரணங்களுக்காகவா? என்ற சந்தேகம் வலுவாக எழுந்தது.
இந்தியாவோ….ட்ரம்ப்பின் அச்சுறுத்தலுக்கு எல்லாம் அடிபணியாமல், அமெரிக்காவை ஈஸி டீலிங் செய்து வருகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் லாவ்ரோவ், சுயமரியாதைமிக்க நாடான இந்தியாவை, ட்ரம்ப் தொட்டு பார்க்க நினைத்தால், அவருக்குக் கெட்டதாகவே அமைந்துவிடும் எனப் பஞ்ச் லைனாகத் தெரிவித்துள்ளார்.
ஜ.நா. பொதுசபைக் கூட்டத்தில் உரை நிகழ்த்தியபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியா – ரஷ்யா இடையிலான உறவை முறிக்க ட்ரம்ப் பகல் கனவு காண்பதாகத் தெரிவித்தார். அதே நேரத்தில் , ரஷ்யாவிடம் மட்டுமெ வர்த்தகம் மேற்கொள்ள வேண்டும் என்றெல்லாம் நாங்கள் நிர்பந்திக்க மாட்டோம் என்றும் இந்தியாவின் வர்த்தக உரிமையை எப்போதும் மதிப்பதாகவும் தெரிவித்தார்.
கடைசியில் லாவ்ரோவ் கூறிய தகவல் தான் அமெரிக்காவுக்கு கிலி ஏற்படுத்தியுள்ளது. வரும் டிசம்பர் மாதத்தில் ரஷ்ய அதிபர் புதின், இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக லாவ்ரோவ் தெரிவிக்க, சர்வதேச அரங்கில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு, தொழில்நுட்பம், சுகாதாரம், வர்த்தகம் என அனைத்து துறை சார்ந்த பேச்சுகளும் இடம்பெறும் என லாவ்ரோவ் தெரிவித்திருந்தாலும், அதிபர் ட்ரம்பிற்கு மண்டை குடைச்சல் ஏற்படுத்தும் செய்தியாகவே இது பார்க்கப்படுகிறது.