உலகில் எல்லா தீவிரவாதத்திற்கும் பின்னணியில் இருப்பது ஒரே நாடு தான் எனப் பாகிஸ்தானை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடுமையாகச் சாடியுள்ளார். ஐ.நா. பொதுக்கூட்டத்தில் ஜெய்சங்கரின் அனல் பறந்த பேச்சை விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.
ஐநா பொது சபையின் 80ஆவது பொதுக்குழு கூட்டம் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. ஐநா உறுப்பு நாடுகள் சார்பாக அதன் தலைவர்களும் பிரதிநிதிகளும் பொது சபையில் உரையாற்றிய வண்ணம் இருக்கின்றனர். இந்தப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்காத நிலையில், இந்தியா சார்பாக மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது எல்லை தாண்டிய பயங்கரவாதம், வரி வர்த்தகம் எனப் பல்வேறு விஷயங்களைக் குறிப்பிட்ட ஜெயசங்கர், பாகிஸ்தானை கடுமையாகச் சாடினார். உலக பயங்கரவாதத்தின் ஒட்டுமொத்த மையமாக இருக்கும் பாகிஸ்தானை அண்டை நாடாகக் கொண்டிருப்பதை எண்ணி வெட்கப்படுவதாகவும், பல தசாப்தங்களாகவே பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடையவர்கள் பாகிஸ்தானை சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர் என்றும் ஆவேசத்துடன் தெரிவித்தார்.
பயங்கரவாதத்தை வேரறுப்பதில் உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என அழைப்பு விடுத்த ஜெய்சங்கர், பயங்கரவாதத்தை கொள்கையாகக் கொண்டிருக்கும் நாடுகளைத் தனிமைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். பயங்கரவாத செயல்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் நிதி உதவி செல்வதை தடுக்க உடனடி நடவடிக்கை தேவை என்றும் கேட்டுக்கொண்டார்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 26 அப்பாவிகள் கொல்லப்பட்ட சம்பவத்தை வேதனையுடன் குறிப்பிட்ட ஜெய்சங்கர், இது போன்ற கோழைத்தனமான நடவடிக்கைகளைப் பாகிஸ்தான் நிறுத்தாவிட்டால், விளைவுகள் வேறுவிதமாக இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
‘ஆப்ரேஷன் சிந்தூர்’ பற்றிக் குறிப்பிட்டு பேசிய ஜெய்சங்கர், அப்பாவி மக்களின் உயிரைப் பறித்த குற்றவாளிகளை இந்தியா நீதியின் முன் நிறுத்தியதாகத் தெரிவித்தார். இறுதியாக ஜெய்சங்கர் தெரிவித்த கருத்துதான், மொத்த ஸ்பீச்சிலும் கூடுதல் கவனம் பெற்றது.
இன்று சில நாடுகள் பயங்கரவாதத்தை ஆதரிக்கலாம்…. ஆனால் அதுவே உங்கள் அழிவுக்கு வழிவகுக்கும் என ஜெய்சங்கர் தெரிவிக்க, ஒட்டுமொத்த அரங்கமும் அப்ளாஸ் கொடுத்து இந்தியாவின் நிலைப்பாட்டை ஆமோதித்தது.