ஐ.நா. அவையில் பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்ட பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் முகத்திரையை கிழித்து தொங்கவிட்டுள்ளது இந்தியா. எந்த நாடகமும் உண்மையை மறைக்க உதவாது என்றும் பாகிஸ்தானுக்கு இந்தியா மரண அடி பதிலைக் கொடுத்துள்ளது.
ஐ.நா.பொதுச்சபையில் கொக்கரித்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இந்தியாவுக்கு எதிராக அபத்தமான குற்றச்சாட்டுகளை அடுக்கினார். காஷ்மீர் மக்களுக்குப் பாகிஸ்தான் உறுதுணையாக இருப்பதாகத் தெரிவித்த கூறிய அவர், ஐக்கிய நாடுகள் சபையில் வாக்கெடுப்பு நடத்தி, காஷ்மீர் மக்கள் சுயமாக முடிவெடுப்பதற்கான அடிப்படை உரிமையை உறுதி செய்யுமாறு முதலை கண்ணீர் வடித்தார்.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது 7 இந்திய போர் விமானங்களைத் தூசியைப் போல் சுட்டுவீழ்த்தியதாகக் கூச்சமே இல்லாமல் பொய்யுரைத்தார். அதோடு நிறுத்தாமல், சிந்துநதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தியது போரைத் தூண்டும் செயல் என்று கூறிய பாகிஸ்தான் பிரதமர், தெஹ்ரீக் இ தலிபான், பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் போன்ற வெளிநாட்டு ஆதரவு குழுக்கள் பாகிஸ்தானை குறிவைப்பதாகக் கூறினார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் பொய்யுரைக்கு இந்தியா சார்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. பாகிஸ்தான் பிரதமர் உரையை கிழித்து தொங்கவிட்டார் இந்திய தூதர் பெடல் கெலாட்.. உள்நாட்டில் பயங்கரவாதத்தை வளர்த்துக் கொண்டே வெளிநாடுகளில் அமைதியை போதிக்கும் பாகிஸ்தானின் இரட்டை வேடத்தை இந்தியா கடுமையாக சாடியது. பாகிஸ்தான் பிரதமரின் பேச்சு அபத்தமான நாடகம் என குறிப்பிட்ட பெடல் கெலாட், பயங்கரவாதத்தை ஆதரித்து வளர்ப்பதுதான் பாகிஸ்தானின் வெளியுறவுக் கொள்கை என்று காட்டமாகப் பதிலளித்தார்.
இந்தியாவுடன் அமைதியே பேண விரும்புவதாக ஷெபாஸ் ஷெரீப் பேசியதை கோடிட்டு காட்டிய கஹ்லோட், அது உண்மையாக இருந்தால், பாகிஸ்தான் உடடினயாக பயங்கரவாத முகாம்கள் அனைத்தையும் ஒழித்துவிட்டு, இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதிகளை ஒப்படைக்க வேண்டும் என்று பதிலளித்தார்.
நம்பிக்கை மற்றும் சகிப்புத்தன்மை பிரச்னைகளில் பாகிஸ்தானின் பாசாங்குதனத்தை ஐ.நா.வில் வெளிச்சம் போட்டுகாட்டியது இந்தியா… வெறுப்பு, மதவெறி, சகிப்புத்தன்மையின்மையை பின்பற்றும் ஒரு நாடு, நம்பிக்கையை பற்றி பிரசங்கம் செய்வது முரண்பாடாக உள்ளதாகக் கூறிய இந்தியா, கண்ணாடியில் பார்த்தால் பாகிஸ்தானின் அவர்களுடைய முகம் அவர்களுக்கே புரியம் என்றும் விமர்சித்தது.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை முறியடித்ததாகப் பாகிஸ்தான் பிரதமர் பொய்யாகத் தம்பட்டம் அடித்து வருவதற்கு இந்தியா சார்பில் உரிய பதிலடி தரப்பட்டது. இந்திய படைகளால் பாகிஸ்தானின் பல விமான தளங்கள் அழிக்கப்பட்ட படங்கள் நிச்சயமாக பொதுமக்களுக்குக் கிடைப்பதாகக் கூறிய இந்தியா, பாகிஸ்தான் பிரதமர் கூறியதுபோல், விமானதளங்கள், எரிந்த ஹேங்கர்கள் வெற்றியைப் போல் தோன்றினால் பாகிஸ்தான் அதனை தாரளமாக கொண்டாடலாம் என்று மூக்கறுத்தது.
‘ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு மன்றாடியது என்பதையும் அம்பலப்படுத்தியது. பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டு மக்களைப் பாதுகாப்பதுதான் தங்களது குறிக்கோள் என்று கூறிய இந்தியா, கடந்த காலங்களைப் போலவே இந்தியாவில் அப்பாவி பொதுமக்கள்மீதான பயங்கரவாத தாக்குதலைப் பாகிஸ்தான் அரங்கேற்றியது என்பதுதான் உண்மை என்று கோடிட்டு காட்டியது. நாட்டு மக்களைப் பாதுகாக்கும் உரிமைக்காக ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் இந்தியா தெளிவுபடுத்தியது.
ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது காட்டுமிராண்டித்தமான தாக்குதலை நடத்திய ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் தீவிரவாத அமைப்பை 2025 ஏப்ரல் 25ம் தேதி அன்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பாதுகாத்தது இதே பாகிஸ்தான்தான் என்றும் இந்தியா கடுமையாக சாடியது. பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யும் ஒரு நாடு, அந்நோக்கத்திற்காக மிகவும் அபத்தான, கூச்சமான கட்டுக்கதைகளை அவிழ்த்துவிடுவதில் வெட்கப்படப் போவதில்லை என்றும் விமர்சித்தது.
பயங்கரவாதத்தை பொறுத்தவரை பயங்கரவாதிகளுக்கும், அவர்களது ஆதரவாளர்களுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை என்று தெளிவுபடுத்தியது இந்தியா… மேலும் அணு ஆயுத அச்சுறுத்தலின் கீழ் பயங்கரவாதத்தை நடைமுறைப்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்று கூறிய இந்தியா, அணுஆயுத அச்சுறுத்தல்களுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தது.
இந்தியாவும், பாகிஸ்தானும் தங்களுக்கு இடையே நிலவும் எந்தவொரு பிரச்னையும் இருதரப்பு ரீதியாகத் தீர்க்கப்படும் என்று ஒப்புக்கொண்டுள்ளன. இந்த விவகாரத்தில் எந்தவொரு மூன்றாம் தரப்பினருக்கும் இடமில்லை என்று ஆணித்தரமாக எடுத்துரைத்த இந்தியா, இது தங்களது நீண்டகால தேசிய நிலைப்பாடு என்றும் ஐ.நா.அவையில் அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்தது.
இதன் மூலம் பாகிஸ்தானின் பொய்யுரைகளை தோலுரித்துக் காட்டிய இந்தியா, சமரசம் என்ற பெயரில் மூன்றாம் தரப்பு மூக்கை நுழைக்கக் கூடாது என்பதை தெள்ளத் தெளிவாகக் கூறியுள்ளது.