கரூர் கூட்டநெரிசல் உயிரிழப்பு தொடர்பான வழக்கில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கரூர் துயர சம்பவம் தொடர்பாகத் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், இணை செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், கரூர் மாநகர பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், கரூர் பிரசார உயிரிழப்புகள் தொடர்பாகக் காவல்துறை உள்நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், இந்த வழக்கு, அடிப்படை ஆதாரமற்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவெக பிரசார கூட்டத்திற்கு அதிகமானோர் வருவார்கள் என மாவட்ட எஸ்பியிடம் முன்கூட்டியே மனு அளித்தும் கடைசி வரை அனுமதியளிக்கவில்லை என்றும், இறுதியாக, குறுகிய வேலுச்சாமிபுரம் பகுதியில் அனுமதியளித்ததால்தான் இத்தகைய நிகழ்வு ஏற்பட்டதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தவெக பிரசார கூட்டத்தில் குண்டர்கள் நுழைந்து செருப்பு வீசியதாலும், ஆளில்லாத ஆம்புலன்ஸ் வாகனத்தை அனுப்பியதாலும் கூட்டநெரிசல் ஏற்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், தன் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் முன்ஜாமின் வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.