ஆப்கானிஸ்தானில் உள்ள பக்ராம் விமானப்படை தளத்தை மீண்டும் கைப்பற்ற துடித்துக் கொண்டிருக்கிறது அமெரிக்கா. ஆப்கானிஸ்தான் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்து வரும் நிலையில், அமெரிக்காவின் முடிவு இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதைப் பற்றித் தற்போது பார்க்கலாம்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு வடக்கே 60 கிலோமீட்டர் தொலைவில் பர்வான் மாகாணத்தில் அமைந்துள்ளது பக்ராம் விமானத் தளம். தாலிபனுக்கு எதிரான போரில் 20 ஆண்டுகளாகக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த விமானப்படை தளத்தை பிரமாண்டமாகக் கட்டியெழுப்பியிருந்தது அமெரிக்கா. 2021ம் ஆண்டு அமெரிக்கப் படைகளால் கைவிடப்பட்டாலும், அதன் முக்கியத்துவத்தை மறக்கவில்லை. அதன் வெளிப்பாடுதான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அண்மைக்கால மிரட்டல் பேச்சுக்குக் காரணம்.
பக்ராம் விமானப்படை தளத்தை அமெரிக்கா மீண்டும் கைப்பற்ற விரும்புவதாகக் கூறிய டிரம்ப், அவ்வாறு நடக்கவில்லை என்றால் தாலிபன் அரசு விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்திருந்தார். சீனா தனது அணு ஆயுதங்களை உருவாக்கும் இடத்தில் இருந்து பக்ராம் விமானப்படை தளம் ஒருமணி நேர தூரத்தில் உள்ளது என்பதால் மீண்டும் பெற விரும்புவதாகக் கூறியிருந்தார். ஆனால் இதற்கு தாலிபன் அரசு கடுமையான எதிர்வினையாற்றியிருந்தது.
ஆப்கானிஸ்தானியர்கள் வரலாற்றில் ஒருபோதும் வெளிநாட்டு ராணுவ இருப்பை ஏற்றுக்கொண்டத்தில்லை என்று கூறியது தாலிபன் அரசு. தோஹா பேச்சுவார்த்தை மற்றும் ஒப்பந்தத்தின்போதும் அமெரிக்காவின் விருப்பம் முழுமையாக நிராகரிக்கப்பட்டது. முதன் முதலில் 1950-களில் சோவியத் ஒன்றியத்தால் கட்டப்பட்ட பக்ராம் விமானப்படைதளம், 1980-களில் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தபோது சோவியத் யூனியனின் முக்கிய ராணுவத் தளமாக மாறியது. 1988-ல் தனது படைகளை திரும்பப் பெற்றது.
2001-ம் ஆண்டில் அமெரிக்கா தாலிபனை ஆட்சியில் இருந்து அகற்றியபோது, இந்தத் தளத்தைக் கட்டுப்பாட்டில் எடுத்தது. 77 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் விரிவடைந்திருந்த இந்த தளத்தை கான்கிரீட் மற்றும் எஃகால் கட்டியெழுப்பியிருந்தது அமெரிக்கா. இதன் காரணமாகவே பக்ராம் விமானப்படை தளம் அமெரிக்காவின் மிகப்பெரிய மற்றும் உலகின் வலிமையான விமான தளங்களில் ஒன்றாக அறியப்பட்டது.
பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் ஒரே நேரத்தில் தங்கக்கூடிய அளவுக்கான முகாம்களும், 2 மீட்டர் தடிமனில் இரண்டரை கிலோ மீட்டருக்கும் மேல் நீளமான ஓடுபாதைகளும் உள்ளன. பக்ராம் நீண்ட காலமாக உளவுத்துறை மற்றும் கண்காணிப்புக்கான மையமாக இருந்து வருகிறது. மேம்பட்ட ISR அமைப்புகளை வழங்கும் இந்த இடம், அமெரிக்காவுக்கு ஜின்ஜியாங்கில் உள்ள சீன அணு ஆயுதக் கிடங்குகள், ரஷ்ய துருப்புக்களின் நகர்வுகள் மற்றும் ஈரானிய ப்ராக்ஸி நெட்வொர்க்குகளை கண்காணிக்க உதவியது.
சீனா புதிய ஏவுகணை கிடங்குகளை உருவாக்கி அதன் அணு ஆயுதக் கிடங்கை விரிவுபடுத்துவதால், மிக அருகில் இருந்து நகர்வுகளை கவனிக்கும் திறன் அமெரிக்காவிற்கு ஒப்பிட முடியாத ஆற்றலை வழங்கும். பக்ராம் விமானத் தளத்திற்கு மிக அருகில் உள்ள சீன அணுசக்தி ஆய்வகம், வடமேற்கு சீனாவில் உள்ள ‘லோப் நூர்’ என்ற இடத்தில் 2,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
சாலை அல்லது பிற வழிகளில் இந்தத் தொலைவை கடக்க பலமணி நேரம் ஆகலாம். ஆனால் லாக்ஹீட் எஸ்ஆர்-71, பிளாக்பேர்ட் போன்ற நவீன ராணுவ விமானங்கள் இந்தத் தூரத்தை சுமார் ஒருமணி நேரத்தில் கடந்துவிட முடியும். அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளுக்கு இடையேயான பதற்றம் உச்சத்தில் உள்ள நிலையில், மத்திய ஆசியாவில் அமெரிக்காவின் வான்வழி ஆதிக்கத்திற்கு பக்ராம் விமானப்படை தளம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் சீனா இதற்கு எதிர்வினையாற்றியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் பிராந்திய ஒருமைப்பாட்டை மதிப்பதாகக் கூறியுள்ள சீனா , பிராந்திய பதற்றத்தை அதிகரிப்பது ஆதரவை பெறாது என்று கூறியுள்ளது. பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்த பிராந்தியத்தை சேர்ந்தவர்கள் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை தருவார்கள் என்றும் தெரிவித்துள்ளது. சீனா ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் பில்லியன் கணக்கான முதலீடு செய்துள்ளது, லித்தியம், தாமிரம் மற்றும் அரிய மண் படிவுகளை குறிவைத்து காபூலை அதன் பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சியில் இணைத்துள்ளது.
விமானத் தளத்தை அமெரிக்கா கைப்பற்றினால், சீனாவின் அணுசக்தி மையங்களுக்கு மட்டுமின்றி, அதன் ‘பெல்ட் அண்ட் ரோடு இனிசியேட்டிவ்’ திட்டத்திற்கும் ஆபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர். ஒரு துணிச்சலான இராஜதந்திர நடவடிக்கையில் ரஷ்யா, 2025இல் தலிபான் அரசாங்கத்தை முறையாக அங்கீகரித்தது, அமெரிக்க செல்வாக்கு ஓரளவுக்கு இருப்பதை உறுதி செய்தது.
பெய்ஜிங் மற்றும் மாஸ்கோ இரண்டிற்கும், பக்ராமுக்கு அமெரிக்கா திரும்புவது ஒரு விரோதமான செயலாகக் கருதப்படும் இது, ஆசியாவின் மையத்தில் பனிப்போர் பாணி மோதலை மீண்டும் தூண்டும். பக்ராம் விமான தளம், தெற்காசியா, மத்திய ஆசியா மற்றும் மத்திய கிழக்கு முழுவதும் அதிகார சமநிலையை தீர்மானிக்கக்கூடும். தற்போது அதனை கைப்பற்ற துடிக்கும் அமெரிக்காவின் முயற்சியால், அதன் தாக்கம் ஆப்கானிஸ்தானை தாண்டியும் நீட்சியடைந்துள்ளன. இந்தியாவை பொறுத்தவரை பக்ராம் ஆபத்தை பிரதிநிதித்துவப் படுத்துகிறது. பனிப்போருக்கு பிறகு பாகிஸ்தானை அதிகாரம் செய்யும் அதேவேளையில் புதிய உறுதியற்ற தன்மையை கட்டவிழ்த்துவிடும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்துகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில்தான் பாதிப்பு அதிகமாகவே இருக்கும் என்று கருதப்படுகிறது. அமெரிக்காவின் நடவடிக்கையால், ஆப்கானிஸ்தானில் ஏற்படும் கிளர்ச்சி, தவிர்க்க முடியாமல் இந்தியாவின் பிரச்னைகளுக்குரிய பகுதிகளுக்குப் பரவ வாய்ப்புள்ளதாகப் பார்க்கப்படுகிறது. மற்றொரு வகையில் அமெரிக்காவின் இருப்பு, சீன அணுசக்தி நடவடிக்கைகளை அம்பலப்படுத்தக்கூடும் என்பதால், இந்தியா நன்மை பயக்கும் உளவுத்துறை தகவல்களை பெற முடியும். அதே நேரத்தில் அமெரிக்காவின் எதிர்பார்ப்பு மற்றும் சீனாவின் கோபத்திற்கு இடையே இந்தியா செல்ல வேண்டிய நிலையை ஏற்படுத்தக்கூடும் என்கிறார்கள் நிபுணர்கள். பொருளாதார ரீதியாக, இந்தியா தனது வள பாதுகாப்பு உத்தியின் ஒரு பகுதியாக ஆப்கானிய கனிமங்களை, குறிப்பாக லித்தியத்தை, கண்காணித்து வருகிறது.
எல்லையில் பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு, பொருளாதார, ராஜதந்திர மற்றும் மனிதாபிமான ரீதியிலான நடைமுறை இந்தியாவுக்கு கை கொடுக்கும். ரஷ்யாவை அந்நியப்படுத்தாமல் பெய்ஜிங்கின் விரிவடையும் செல்வாக்கை சமநிலைப்படுத்த, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடனான கூட்டாண்மைகளையும் இந்தியா பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது.