மத்திய ரிசர்வ் வங்கி மற்றும் இந்தியக் குடும்பங்கள் சேர்த்து, 30 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடைய தங்கம் இந்தியாவின் மொத்த தங்கக் கையிருப்பாக உள்ளது. இது இந்தியாவின் மொத்த அந்நிய செலாவணி இருப்பை விடச் சுமார் 10 மடங்கு அதிகம். இதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
செல்வச் செழிப்பு மற்றும் அதிகாரத்தின் அடையாளமாகத் தங்கம் இருந்து வருகிறது. டிஜிட்டல் கரன்சி, கிரிப்டோ கரன்சி என உலகில் பண பரிவர்த்தனைகளில் நவீன மாற்றங்கள் வந்தாலும் கூட, உலகில் பொருளாதாரத்தை பாதுகாப்பானதாக வைத்திருப்பதில் தங்கமே முக்கிய பங்கு வகிக்கிறது.
அதிக தங்க இருப்பு உள்ள நாடுகளால் தான் பணவீக்கத்தைக் குறைக்கவும், நாணய ஏற்ற இறக்கங்களிலிருந்து பாதுகாக்கவும், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வளர்க்கவும் நாடுகளுக்கு அதன் தங்கம் இருப்பே துணை நிற்கிறது என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்க கருவூலப் பத்திரங்கள் மற்றும் டாலரின் மதிப்பில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் காரணமாக, மத்திய வங்கிகளுக்குத் தங்கம் ஒரு முக்கியமான முதலீடாக மாறியுள்ளது. இதுவே சர்வதேச நாடுகளின் மத்திய வங்கிகள் பெருமளவில் தங்கம் வாங்குவதற்கு வழிவகுத்தது. உலகளாவிய மத்திய வங்கிகள் 2024 ஆம் ஆண்டில் 84 பில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கத்தை வாங்கியுள்ளன.
இதனாலேயே கடந்த ஆண்டு உலக சந்தையில் தங்கத்தின் விலை சுமார் 20 சதவீதம் உயர்ந்துள்ளன. இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே இந்தியா தங்கம் வாங்குவதை நிறுத்திவைத்துள்ளது. அப்படி இருந்தும், இந்திய ரிசர்வ் வங்கியிடம் 10.28 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 879.58 மெட்ரிக் டன் தங்கம் கையிருப்பாக உள்ளது.
கடந்த ஆண்டு, இதே தங்கத்தின் மதிப்பு சுமார் 2.74 லட்சம் கோடி ரூபாய் ஆகும். அதிகமான தங்கத்தின் விலை உயர்வின் மூலமே இந்தியா வைத்திருக்கும் தங்கத்தின் மதிப்பு 275 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், இந்தியாவின் அந்நிய செலாவணி இருப்புகளில் தங்கத்தின் பங்கு கடந்த ஆண்டு 9 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்திய ரிசர்வ் வங்கியின் தங்க இருப்பு 35 சதவீதம் அதிகரித்து, 880 டன்னாக உயர்ந்துள்ளது.
2015-ல் உலக தங்க தரவரிசையில் பத்தாவது இடத்தில் இருந்த இந்தியா இந்த ஆண்டு ஏழாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்தச் சூழலில், இந்திய குடும்பங்கள் 25,000 டன் தங்கத்தைச் சேமித்து வைத்துள்ளன. இது நாட்டின் மொத்த தங்க இருப்புக்களில் 95 சதவீதத்துக்கும் அதிகமாகும்.
இது அமெரிக்கா, ஜெர்மனி, சீனா மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி கூட வைத்திருக்கும் மொத்த தங்க இருப்புக்களை விட அதிகமாக உள்ளது அமெரிக்காவிடம் 8,000 டன், ஜெர்மனியிடம் 3,300 டன் , இத்தாலியிடம் 2,450 டன் , பிரான்ஸிடம் 2,400 டன் மற்றும் ரஷ்யாவிடம் 1,900 டன் என இந்த நாடுகளின் ஒருங்கிணைந்த இருப்புக்களை விடவும் இந்திய குடும்பங்களிடம் உள்ள தங்கம் அதிகமாகும்.
அமெரிக்கா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் அரசின் தங்க இருப்புக்களை நம்பியிருக்கும் நிலையில் இந்தியாவின் பலம், அதன் பாரம்பரியத்தில் உள்ளது. உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள் நீடிக்கும்போது, இந்திய குடும்பங்களில் தங்க இருப்புக்கள் ஒரு கலாச்சார பாரம்பரியமாகவும் நிதி பாதுகாப்பாகவும் தொடர்ந்து செயல்படுகிறது.
















