அமெரிக்காவில் ஆறு ஆண்டுகளில் முதல்முறையாக அரசு இயந்திரம் முடங்கியுள்ளது. செலவினங்களுக்கே திண்டாடும் சூழல் உருவாகியுள்ளதால் அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படும் நிலை ஏற்பட்டுள்ளது…. விமானப் போக்குவரத்து தொடங்கி சிறு வணிக கடன் நிறுவனங்கள் வரை தள்ளாடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதற்கான காரணம் என்ன விரிவாகப் பார்க்கலாம்.
அமெரிக்காவில், அடுத்த நிதியாண்டிற்கான அரசின் செலவினங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இடைக்கால நிதி மசோதா தாக்கல் செய்யப்படுவது வழக்கம். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் மட்டுமே, அமெரிக்க அரசால் செலவினங்களை தொடர்ந்து மேற்கொள்ள முடியும் என்பது எழுதப்பட்ட விதி. அமெரிக்காவின் மேல்சபையான செனட், செலவினங்கள் தொடர்பான இடைக்கால நிதி மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காத காரணத்தால், அரசு இயந்திரம் முடங்கிப்போய் உள்ளது.
செனட்டில், மொத்தம் 100 உறுப்பினர்கள் உள்ள நிலையில், டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு 53 எம்பிக்களும், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சிக்கு 45 எம்பிக்களும் உள்ளனர். சுயேச்சை எம்பிக்கள் இருவர் உள்ளனர். நிதி மசோதாவை நிறைவேற்றக் குறைந்தபட்சம் 60 வாக்குகள் தேவை என்ற நிலையில், செனட்டில் அண்மையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் இடைக்கால மசோதாவுக்கு ஆதரவாக 55 வாக்குகளும், எதிராக 45 வாக்குகளும் பதிவாகின. எனினும், ஜனநாயகக் கட்சியினர் எதிர்ப்பு காரணமாக நிதி மசோதா நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.
இதனால், அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்களை தவிர, மற்ற அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் வீட்டிற்கு அனுப்பப்படும் சூழல் உருவாகியுள்ளது. ஏழு லட்சத்து 50 லட்சம் அரசு ஊழியர்களுக்குக் கிடைக்க வேண்டிய நிதி தடைபடுவதோடு, நாள் ஒன்றுக்கு அரசுக்கு மூவாயிரத்து 300 கோடி இழப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி பற்றாக்குறையால், பிரபலமான கிராண்ட் கேன்யன் உள்பட அமெரிக்கா முழுவதும் 433 தேசிய பூங்காக்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் சுற்றுலா துறையை பாதிக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் சில மாகாணங்கள் பொருளாதார தேவையை பூர்த்தி செய்யும் சில தேசிய பூங்காக்களை இக்கட்டான நிலையிலும் நடத்துவற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளன.
தேசிய பூங்காக்கள் மூடப்படுமாயின், பார்வையாளர்கள், சுற்றுலா பயணிகளை நம்பியுள்ள ஹோட்டல்கள், உணவகங்கள், வணிக ரீதியான நிறுவனங்கள், போக்குவரத்து என அனைத்தும் இழப்பை சந்திக்கும். CBS செய்தியின்படி அவ்வாறு நடக்கும் பட்சத்தில் அமெரிக்கா வாரத்தில் ஒரு பில்லியன் டாலர்கள் இழப்பை சந்திக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளது. விமான நிலையங்கள் திறந்திருக்கும் என்றாலும் நெருக்கடியை தவிர்க்க இயலாது.
நிதி பற்றாக்குறையால், ஆயிரக்கணக்கான FAA ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படலாம் என்றும், பல விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் ஊழியர்கள் சம்பளம் இல்லாமல் வேலை செய்ய நேரிடும் என்றும் போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. அதேநேரத்தில், 21 அருங்காட்சியகங்கள் மற்றும் தேசிய மிருகக்காட்சிசாலையை மேற்பார்வையிடும் ஸ்மித்சோனியன் நிறுவனம், அருங்காட்சியகங்கள், ஆராய்ச்சி மையங்கள் மற்றும் மிருகக்காட்சிசாலையை குறைந்தது அக்டோபர் 6ம் தேதி வரை திறந்திருக்க முந்தைய ஆண்டு நிதியைப் பயன்படுத்துவதாகக் கூறியுள்ளது.
அமெரிக்க அரசு நிர்வாகம் முடக்கம், பொதுமக்களை மட்டுமல்ல, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் கடுமையாகப் பாதிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு டிரம்பின் ஆட்சி காலத்தில், செலவின மசோதா தோல்வி அடைந்த காரணத்தினால், 35 நாட்கள் அமெரிக்க நிர்வாகம் முடங்கியது. கடந்த 2013ம் ஆண்டு ஒபாமா நிர்வாகத்தில் செலவின மசோதா தோல்வி அடைந்த காரணத்தினால் 16 நாட்கள் நிர்வாகம் முடங்கியது குறிப்பிடத்தக்கது.