இந்தியாவின் இளம் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த இளைஞர். யார் அவர்? இத்தகைய உயரத்தை அவர் அடைந்தது எப்படி? விரிவாகப் பார்க்கலாம்.
AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பல்வேறு துறைகளில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. எதிர்காலத்தில் AI இல்லாமல் எதுவும் இல்லை என்ற நிலை வரும் என்கிறார்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள். அத்தகையை AI தொழில்நுட்பத்தை கையிலெடுத்து இந்தியாவின் இளம் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த இளைஞர் அரவிந்த் ஸ்ரீநிவாஸ்.
31 வயதான இவர் M3M HURUN INDIA RICH LIST 2025 பட்டியலில் 21 ஆயிரத்து 190 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளுடன் முதல் இடத்தில் இருக்கிறார். PERPLEXITY செயற்கை நுண்ணறிவு START UP கம்பெனியை நிறுவிய அரவிந்த் ஸ்ரீநிவாஸ் அதன் CEO-வாக செயல்பட்டு வருகிறார்.
1994-ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த அரவிந்த் ஐ.ஐ.டி.யில் பொறியியல் படித்தவர். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஆய்வுப்படிப்பை நிறைவு செய்த அரவிந்த் OPEN AI நிறுவனத்தில் பணியாற்றினார்.
பின்னர் நண்பர்களுடன் இணைந்து PERPLEXITY AI நிறுவனத்தை 2022-ஆம் ஆண்டு தொடங்கினார். OPEN AI-ன் CHAT GPT-க்கு போட்டியாக வந்த PERPLEXITY மூன்றே ஆண்டுகளில் முன்னணி நிறுவனமாக மாறியிருக்கிறது. சுமார் 3 லட்சம் கோடி ரூபாய்க்கு GOOGLE BROWSER-ஐ விலைபேசும் அளவுக்கு அரவிந்த் ஸ்ரீநிவாஸ் வளர்ந்திருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
அவரது திறமையை அறிந்த பிரதமர் மோடி அண்மையில் அவரை அழைத்துப் பேசினார். இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது குறித்து இருவரும் பேசியதாக தகவல் வெளியானது. ஏ.ஆர்.ரகுமான் போன்ற திரை பிரபலங்களும் AI தொழில்நுட்பம் குறித்து அரவிந்திடம் பேசியிருக்கிறார்கள். தமது திறமையால் இந்தியாவை மட்டுமின்றி உலகத்தையே வியந்து பார்க்க வைத்திருக்கிறார் அரவிந்த்.
இந்திய அளவில் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 9 லட்சத்து 55 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளுடன் முகேஷ் அம்பானி முதலிடத்தையும் 8 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளுடன் கவுதம் அதானி இரண்டாம் இடத்தையும் 2 லட்சத்து 84 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளுடன் ரோஷினி நாடார் மல்ஹோத்ரா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
குறுகிய காலத்தில் அந்த பட்டியலில் இடம்பிடித்துள்ள அரவிந்த் ஸ்ரீனிவாஸ், உலகப்பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.