சென்னை போரூரில் அமைதி வழியில் பேரணி நடத்திய ஆர்எஸ்எஸ் அமைப்பினரை திமுக அரசின் காவல்துறை கைது செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என தமிழக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்யும் குற்றவாளிகளும், முதியோர்களை கொலை செய்யும் கொலையாளிகளும் சுதந்திரமாக சுற்றிக்கொண்டிருப்பதை கண்டுகொள்ளாத திமுக அரசு, தங்கள் அமைப்பின் 100வது ஆண்டு நிறைவை குறிக்கும் விதமாக அமைதி பேரணி சென்ற ஆர்எஸ்எஸ் அமைப்பினரை கைது செய்திருப்பது காழ்ப்புணர்ச்சியே அன்றி வேறென்ன? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுமட்டுமன்றி, கடந்த ஆண்டும் இதே போல ஆர்எஸ்எஸ் அமைப்பின் பேரணிக்கு தடை விதிக்க எல்லா வழியிலும் முயற்சித்த திமுக அரசுக்கு குட்டு வைத்த உயர்நீதிமன்றம், வருங்காலத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பேரணிக்கு அனுமதி மறுக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டது என கூறியுள்ளார்.
அதையும் மீறி காவல்துறை கைது செய்திருப்பது நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் செயலாகவே உள்ளது. இனியும் இதுபோன்ற, சிறுபிள்ளைத்தனமான அரசியல் விளையாட்டுகளை திமுக அரசும், காவல்துறையும் தவிர்க்க வேண்டும் என்றும், கைது செய்யப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பினரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.