சொந்த நாட்டு மக்கள் மீதே ராணுவத்தை ஏவி அத்துமீறலில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தான், மனித உரிமைகள் பற்றி பேசுவது அபத்தம் என்று, ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இந்தியா காட்டமாகத் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் கூறிய குற்றச்சாட்டுகளுக்கும் தகுந்த பதிலடி கொடுத்துள்ளது.
ஐ.நா.மனித உரிமைகள் கவுன்சிலின் 60வது கூட்டம் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் நடக்கிறது. அண்மையில் இந்தியாவுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பாகிஸ்தான் அடுக்கியிருந்த நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா கர்ஜனையோடு தனது வாதத்தை முன்வைத்தது.
இந்திய தூதரான முகமது ஹூசைன் பாகிஸ்தானின் பாசாங்குதனத்தை கடுமையாக சாடினார். மனித உரிமைகளை அப்பட்டமாக மீறுவதில் மோசமான பதிவுகளைக் கொண்ட ஒரு நாடு, மனித உரிமைகள் குறித்து மற்ற நாடுகளுக்கு உபதேசம் செய்ய முயற்சிப்பது, முற்றிலும் முரணாக இருப்பதாக விமர்சித்தார்.
இந்தியாவுக்கு எதிரான ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை முன் வைக்கும் பாகிஸ்தான், இந்த மன்றத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும், இது அவர்களின் பாசாங்குதனத்தை மட்டுமே வெளிப்படுத்துவதாகவும் இந்திய தூதர் குறிப்பிட்டார்.
மனித உரிமைகள் பற்றிப் பிரச்சாரம் மேற்கொள்வதற்கு பதிலாக, சொந்த நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிராக நடக்கும் அநீதியை, மத, இன பாகுபாட்டைப் பாகிஸ்தான் நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் இந்திய தூதர் வலியுறுத்தினார். ANI அறிக்கையின்படி, 35வது கவுன்சில் கூட்டத்தில், பாகிஸ்தான் தூதர் அப்பாஸ் சர்வார், ஜம்மு காஷ்மீரில் மோசமான மனித உரிமை மீறல்களை மறைக்க இந்தியா முற்படுவதாகக் குற்றம்சாட்டியிருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் விதமாகவே இந்திய தூதர் முகமது ஹூசைன் இந்தியாவின் கருத்தை ஆணித்தரமாக எடுத்துரைத்தார். அதேநேரத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலவும் அசாதாரண சூழல், ஜெனீவாவில் நடந்த பேச்சுவார்த்தைகளுடன் ஒத்துப்போனது.
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் உரையாற்றிய ஐக்கிய காஷ்மீர் மக்கள் தேசிய கட்சியின் செய்தி தொடர்பாளர் நசீர் அஜீஸ்கான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரமடைந்து வரும் அடக்குமுறைகளைக் களைய சர்வதேச தலையீட்டிற்கு அழைப்பு விடுத்தார்.
அதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நீடிக்கும் பதற்றம், ராணுவத்தின் அடக்குமுறைகளையும் அவர் அடுக்கடுக்காக முன்வைத்தது பாகிஸ்தானுக்கு தலைவலியை ஏற்படுத்தியது. மனித உரிமைகள்பற்றிய பாகிஸ்தான் வாதத்தையும் நீர்த்துப் போகச் செய்தது.