மயிலாடுதுறை ரயில்வே மேம்பாலத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இன்று முதல் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கும்பகோணம் பிரதான சாலையில் உள்ள சாரங்கபாணி நினைவு மேம்பாலத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், இதனால் 3 மாதங்களுக்குப் பாலத்தைப் பயன்படுத்தத் தடை விதிப்பதாகவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.
மேலும் மாப்படுகை ரயில்கேட் பகுதி சாலையைப் பயன்படுத்தும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்தச் சாலையில் உள்ள ரயில்வே கேட் அடிக்கடி சிக்னலுக்காக மூடப்படுவதால் சிரமம் ஏற்படுவதாகத் தெரிவித்த பொதுமக்கள் மாப்படுகை ரயில்வே கேட் சாலை குறுகலானது எனவும் இரு மார்க்க வாகனங்கள் செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்றும் வேதனை தெரிவித்தனர்.
எனவே ரயில்வே கேட் மூடப்படும் நேரத்தைக் குறைக்க வேண்டும் எனவும் மேம்பால பணியை விரைவில் முடிக்க வேண்டும் என்றும் அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.